இதுவரை சுமார் 11.5 கோடி பான் கார்டுகள் முடக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
ஆதார் எண்ணுடன், பான் கார்டை இணைக்க மத்திய அரசு சார்பில் பலமுறை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த 2023-ம் ஆண்டில் மார்ச் மாதம் 31-ம் தேதி வரை ஆதார்-பான் இணைப்புக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. பின்னர் ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் அளித்தது. அதற்கு பின்னரும் ஆதார்-பான் இணைப்பு செய்யாதவர்கள் ரூபாய் 1000 அபராதத்துடன் இணைத்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
இந்த நிலையில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புதிய பான் கார்டை பெறுவதற்கு சரக்கு மற்றும் சேவை வரியை தவிர்த்து பார்த்தோம் என்றால் 91 ரூபாய் தான் ஆகும். ஆனால் பான் கார்டை மீண்டும் செயல்படுத்துவதற்கு 10 மடங்கு அபராதம் எப்படி விதிக்க முடியும்? பான் இணைப்பு ரத்து செய்யப்பட்டவர்கள் எப்படி வருமான வரி கணக்கினை தாக்கல் செய்ய முடியும்? எனவே ஆதார்-பான் இணைப்புக்கு மத்திய அரசு மீண்டும் ஒரு வருட காலம் அவகாசம் அளிக்க வேண்டும்? என கூறியிருந்தார்.
அவருக்கு மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் பதில் அளித்துள்ளது. அதில், “நாட்டில் 70.24 கோடி பேர் பான் கார்டு வைத்துள்ளனர். அதில் 57.25 கோடி பேர் ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைத்துள்ளனர். 11.5 கோடி பேர் ஆதார் எண்ணுடன் பான் கார்டினை இணைக்கவில்லை. எனவே அவர்கள் கார்டினை செயலிழக்க செய்துள்ளோம். புதிதாக பான் கார்டு விண்ணப்பம் செய்வோருக்கு ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைப்பு தானாகவே செய்யப்படுகிறது.
2017 ஜூலை 1 அல்லது அதற்கு முன் பான் கார்டு பெற்றவர்கள் ஆதார் எண்ணுடன் பான் கார்டினை கட்டாயம் இணைக்க வேண்டும். வருமான வரி சட்டப்பிரிவு 139ஏஏ-ன் துணைப்பிரிவு 2-ண் கீழ் 2017 ஜூலை 1-ம் தேதி முதல் பான் கார்டு பெற்றவர்கள் தங்களது ஆதார் எண்ணை தெரிவிப்பது கட்டாயம். இதுவரை இணைக்காதவர்கள் ரூபாய் 1000 அபராதம் செலுத்தி இணைக்க வேண்டும்” எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் பதில் அளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
தங்கம் தென்னரசு வழக்கு: இறுதி விசாரணை எப்போது?
தீபாவளி பண்டிகை: ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு!