மத்திய அரசின் ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி, தனது இந்தி செய்தி சேனலான தூர்தர்சன் (டிடி இந்தியா செய்தி) லோகோவை சிவப்பு நிறத்தில் இருந்து காவி நிறத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மாற்றியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு பல பொதுத்துறை நிறுவனங்களில் தங்களது கட்சி நிறமான காவியைப் புகுத்தி வருவதாக ஏற்கனவே எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது தூர்தர்ஷன் லோகோவையும் காவி நிறத்திற்கு மாற்றியுள்ளதற்கு எதிர்க்கட்சிகள், ஊடக வல்லுநர்கள் கடும் அதிருப்தி மற்றும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கூறுகையில், “மத்திய அரசு நிறுவனங்கள் முழுவதும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடையில் தான் இருக்கிறார்கள்.
ஜி 20 லோகோவிலும் காவி நிறம் காணப்பட்டது. இது சர்வாதிகார ஆட்சியின் ஒரு பகுதியாகும்.” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், ‘இந்தியாவை காவி மயமாக்கும் முயற்சியில் பாஜகவினர் ஈடுபட்டு வருகின்றனர்” என விமர்சனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பிரசார் பாரதியில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜாஹர் சிர்கார், டிடி நியூஸ் சேனல் லோகோ மாற்றம் குறித்து கூறுகையில், “இது பிரச்சார் பாரதி அல்ல. பிரசார பாரதி. அனைத்து மத்திய அரசு நிறுவனங்களையும் காவி மயமாக்கும் நடவடிக்கை நடந்து வருகிறது.
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் நுழைந்தால், அதன் நிறங்கள் காவி நிறமாக மாற்றப்பட்டுள்ளன. மக்களவை, மாநிலங்களவை ஊழியர்களில் பாதி பேர் இப்போது காவி நிற சீருடைகளை அணிந்துள்ளனர்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பிரசார் பாரதியின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், “இது ஆரஞ்சு நிறம். ஜி20 மாநாட்டுக்கு முன் தூர்தர்ஷனின் லோகோவை அதே நிறத்தில் புதுப்பித்தோம். ஒரே குழுவில் இருந்து வரும் இரு செய்தி சேனல்கள் தற்போது ஒரே தோற்றத்தை பின்பற்றுகின்றன”எனத் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தென் சென்னையில் மறுவாக்குப்பதிவு: தமிழிசை வலியுறுத்தல்!
ஒருவழியாக ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ OTT ரிலீஸ் தேதி வெளியானது!