சபரிமலையில் தரிசன நேரம் ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி தொடங்கி மண்டல மகரவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. கார்த்திகை, மார்கழி மாதங்களில் நடைபெறும் இந்த பூஜையை முன்னிட்டு கேரளா மட்டுமன்றி, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலைக்கு செல்வார்கள்.
சிறுவர், சிறுமியர் தொடங்கி முதியவர்கள் வரை இந்நாளில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசித்துவிட்டு வருவார்கள்.
இந்த ஆண்டு மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலைக்கு நாளொன்றுக்கு 90,000 முதல் 1,00,000 வரையிலான பக்தர்கள் சபரிமலைக்கு செல்கின்றனர். இதனால் ஏற்படும் கூட்ட நெரிசலால் பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. 14 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை காத்திருப்பதாக பக்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடையும் பக்தர்கள் வரிசை, தடுப்புகளைத் தாண்டி குதித்து செல்வதாகவும், இதனால் கூட்ட நெரிசல் மேலும் அதிகரிப்பதாகவும் போலீசார் கூறுகின்றனர்.
சபரிமலை, அப்பாச்சிமேட்டில் நேற்று தரிசனத்திற்காக காத்திருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். பின்னர் பம்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சிறுமி சேலத்தைச் சேர்ந்த குமரன் , ஜெயலட்சுமி தம்பதியரின் மகள் என்பது தெரியவந்துள்ளது.
இப்படி கூட்ட நெரிசலால் பக்தர்கள் பாதிக்கப்படும் நிலையில் நேற்று சபரிமலைக்கு அதிகளவு பக்தர்கள் கூட்டம் வருவது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தின் சிறப்பு அமர்வு விசாரணை நடத்தியது.
நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், பி.ஜி.அஜித்குமார், சபரிமலையில் தரிசன நேரத்தை அதிகரிப்பது குறித்து தலைமை தந்திரியுடன் ஆலோசித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டனர்.
அதேசமயம், “சபரிமலையில் அதிகாலை 3 மணியில் இருந்து மதியம் 1 மணி வரையிலும், பிற்பகல் 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரையிலும் மொத்தம் 17 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் கோயில் தலைமை அர்ச்சகர்கள், உதவி அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு தூங்ககூட நேரமில்லை. இதில் தரிசன நேரத்தை அதிகரித்தால் இவர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும்” என அர்ச்சகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் தேவசம் போர்டு இன்று (டிசம்பர் 10) பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியிருக்கிறது. இதன்முடிவில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தலைமை தந்திரி ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இனி மதியம் 3 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதுபோன்று கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் மெய்நிகர் வரிசை முன்பதிவை ஒரு நாளைக்கு 90,000த்திலிருந்து 80,000 ஆக குறைக்க தேவஸ்வம் போர்டு முடிவெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
அரையாண்டுத் தேர்வு : புதிய அட்டவணை இதோ!
ஸ்ரீரங்கம் கோயில் சுவர் சிற்பங்கள் சேதம் : என்ன நடந்தது?
மழையில் பாதித்த சிறு, குறு தொழில்கள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!