Daily Maverick get cyber attack

மோடி குறித்து செய்தி வெளியீடு: பிரபல இணையதளம் மீது சைபர் தாக்குதல்!

இந்தியா

பிரிக்ஸ் மாநாட்டுக்கு வருகை தந்த பிரதமர் மோடி குறித்து செய்தி வெளியிட்டதை அடுத்து, தங்களது இணையதளம் சைபர் தாக்குதலுக்கு ஆளானதாக தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பிரபல இணையதளம் தெரிவித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் உச்சி மாநாடு இந்த ஆண்டு ஜோகன்ஸ்பர்க்கில் கடந்த 22 முதல் 24ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக 22ஆம் தேதி காலையில் டெல்லியில் இருந்து பிரதமர் மோடி தனி விமானத்தில் புறப்பட்டு சென்றார்.

ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள வாட்டர்க்ளூஃப் விமானப்படை தளத்தில்  தரையிறங்கிய பிரதமர் மோடியை தென்னாப்பிரிக்கா நாட்டின் துணை ஜனாதிபதி பால் மஷாதிலே வரவேற்றார். மேலும் மோடி முன்பாக அந்நாட்டின் பாரம்பரிய நடன கலைஞர்களும் நடனம் ஆடி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதேவேளையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் சிரில் ரமபோசா நேரில் சென்று வரவேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே அந்நாட்டில் இருந்து செயல்பட்டு டெய்லி மேவரிக் என்ற இணையதள செய்தி நிறுவனம், ’விமான நிலையத்தில் தன்னை வரவேற்க துணை அதிபர் அனுப்பி வைக்கப்பட்டதால் வேதனையடைந்த பிரதமர் மோடி,  விமானத்தை விட்டு கீழிறங்க மறுத்துவிட்டார்’ என்று பரபரப்பான செய்தி வெளியிட்டது.

Daily Maverick get cyber attack

இதனை “Tough Love Triangle: While Ramaphosa focused on xi, Modi threw a tantrum and refused to get off his plane” என்ற தலைப்பில் வெளியிட்டு இருந்தது.

இவ்வாறு மோடி குறித்து செய்தி வெளியான சில மணி நேரங்களிலேயே டெய்லி மேவரிக் இணையதளம்  விநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பு எனப்படும் டிடிஓஎஸ் என்ற (DDoS) சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக புகார் எழுந்துள்ளது.

டிடிஓஎஸ் தாக்குதல் என்பது குறிப்பிட்ட இணையதளத்தை பயனர்கள் யாரும் அணுக விடாமல் தடுப்பது ஆகும்.

இதுகுறித்து டெய்லி மேவரிக்கின் தலைமை ஆசிரியர் பிராங்கோ ப்ர்கிக் கூறுகையில், “பிரதமர் மோடிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பையும், அவர் விமானத்தில் இருந்து இறங்க மறுத்ததையும் குறித்து செய்தி வெளியிட்ட சில மணி நேரத்தில் எங்களது இணையதள பக்கத்தின் மீது சைபர் தாக்குல் நடைபெற்றுள்ளது.

Daily Maverick get cyber attack

பின்னர்  இதனை டிடிஓஎஸ் தாக்குதல் என அடையாளம் கண்டு கொண்டோம். மேலும் இந்த முழுத் தாக்குதலும் இந்திய சர்வர்களில் இருந்து தான் தொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கண்டறிந்தோம்.

இதனையடுத்து பயர்வாலை பயன்படுத்தி எங்களது இணையதள பக்கத்தை மீட்டோம். எனினும், தளத்தினை பாதுகாப்பதற்காக இந்தியாவின் முழு டொமைனையும் நாங்கள் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது” என்று கூறினார்.

மேலும் அவர், “இந்த தாக்குதலின் மூலம், பிரதமர் மோடி குறித்து நாங்கள் வெளியிட்ட செய்தியை இந்திய மக்கள் யாரையும் படிக்க விடாமல் தடுப்பதே என்பது சைபர் தாக்குதலில் நோக்கம் என்பது எங்களுக்கு தெளிவாக தெரிந்தது.

விபிஎன் வழியாக இணைக்க முயற்சித்தாலும், தற்போது இந்தியாவில் இருந்து யாரும் டெய்லி மேவரிக் இணையதளத்தை அணுக முடியாது. எனினும் சைபர் தாக்குதலை சரிசெய்து  இந்தியர்கள் அதனை அணுகுவதற்கான வழிகளை ஆராய்ந்து வருகிறோம்.” என்று ப்ர்கிக் தெரிவித்துள்ளார்.

Daily Maverick get cyber attack

இதற்கிடையே டெய்லி மேவரிக்கின் செய்தியை முற்றிலும் பொய் என்று தென்னாப்பிரிக்கா துணை அதிபர் பால் மஷாதிலே அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மஷாதிலே அலுவலக செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள பேட்டியில், “டெய்லி மேவரிக் செய்தி வெளியிட்டதில் ஒவ்வொரு அம்சமும் பொய்.  துணை அதிபர் தான் மோடியை விமான நிலையத்தில் வரவேற்பார் என்று முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள டெய்லி மேவரிக் இணையதளம், “எங்களது செய்தியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.  மேலும் நடைபெற்றுள்ள சைபர் தாக்குதலில் இருந்து மீள்வதற்கான முழு முயற்சிகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

”முதலில் தண்ணீர் வாங்கி கொடுக்கட்டும்… அப்புறம்”: ஸ்டாலினை விமர்சித்த தமிழிசை

தலைக்காட்டுவாரா தல: அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0