கொரோனா காலகட்டத்தின்போது தடுப்பூசிக்காக கோவின் (CoWIN) செயலியில், பிறந்த தேதி, ஆதார் எண், பாஸ்போர்ட் எண், முகவரி என தங்களின் விவரங்களைப் பதிவுசெய்த அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பொதுமக்களின் தரவுகள் டெலிகிராம் போட் (Telegram Bot) மூலம் வெளியில் கசிந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் கோவின் செயலி பாதுகாப்பானது என ஒன்றிய அரசு விளக்கமளித்துள்ளது.
கோவின் செயலியை அறிமுகப்படுத்தியபோது பேசிய தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.எஸ்.சர்மா,
“CoWIN அதிநவீன பாதுகாப்பு உள்கட்டமைப்பைக்கொண்டிருக்கிறது. ஒருபோதும் இது பாதுகாப்பு மீறலை எதிர்கொண்டதில்லை. CoWIN-லுள்ள குடிமக்களின் தரவு முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். CoWIN-லிருந்து தரவு கசிந்ததாக எந்தவொரு செய்தியும் இல்லை” என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கோவின் செயலில் பதிவுசெய்யப்பட்ட தரவுகள் தற்போது கசிந்திருந்தது. இதில் சாதாரண மக்கள் மட்டுமின்றி, அரசியல் பிரமுகர்கள் உட்பட பலரின் ஆதார் எண், பாஸ்போர்ட் எண் உள்ளிட்ட தரவுகள் கசிந்ததாகச் சொல்லப்படுகிறது.
பிரபல ஊடகங்களின் பத்திரிகையாளர்களும் இதில் அடங்குவர். இது தொடர்பாக யார் யாருடைய தரவுகள் கசிந்திருக்கின்றன என்பது குறித்து திரிணாமுல் காங்கிரஸின் தேசிய பொதுச்செயலாளர் சாகேத் கோகலே ட்வீட் செய்திருக்கிறார்.
இந்த நிலையில், ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் ‘கோவின் செயலி‘ பாதுகாப்பானது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. கோவின் செயலியில் தனிநபர் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் ஆதாரமற்றவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
தரவு மீறல் பற்றிய அனைத்து அறிக்கைகளும் எந்த அடிப்படையும் இல்லாமல் உள்ளதாகவும் தனிநபர் தகவல்கள் கசிந்ததாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து பரிசீலித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு CERT-In ஐ மத்திய சுகாதார அமைச்சகம் கோரியுள்ளது.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் மில்க் ஷேக்!
“பார்களை மூடியதால் வருவாய் இழப்பு” – தமிழக அரசு