சீனாவிலிருந்து கோவை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சீனாவில் இந்த மாதம் துவக்கத்திலிருந்து கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருகிறது. நாள் ஒன்றுக்கு 10 லட்சத்திற்கும் மேல் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக விமான நிலையங்களில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்தநிலையில் சீனாவிலிருந்து இலங்கை மூலம் மதுரைக்கு வந்த தாய், மகள் இருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியான நிலையில், சீனாவிலிருந்து கோவை வந்த மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பது பொதுமக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள தப்பைக்குட்டை கிராமம் கருப்பக் கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 13 வருடங்களாக சீனாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் கடந்த 27-ஆம் தேதி இரவு சீனாவிலிருந்து விமானம் மூலம் சிங்கப்பூர் வந்து, அங்கிருந்து விமானம் மூலம் கோவை வந்தார்.
கோவை வந்த அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவு இன்று (டிசம்பர் 29) வெளியாகி உள்ள நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது தெரியவந்துள்ளது. அவரை சேலம் மகுடஞ்சாவடி சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு பிஎப் 7 வகை வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்
ஆன்லைன் தடைசட்ட மசோதா: ராமதாஸ் காட்டம்!
113 முறை விதிமீறினார் ராகுல்: காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு சிஆர்பிஎஃப் பதில்!