ஜாமீனில் வெளிவரக்கூடிய நபர்களை கண்காணிக்க கூகுள் லொகேஷனை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நிபந்தனை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போதை பொருள் வழக்கில் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ப்ரான்க் விட்டஸ் டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ப்ரான்க் விட்டஸ் ம்ற்றும் அவருடன் கைது செய்யப்பட்டவருக்கு 2022ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது
அப்போது, ஜாமீன் வழங்குவதற்கான நிபந்தனையாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில், வழக்கின் புலனாய்வு அதிகாரிக்கு கூகுள் லொகேஷனை பகிர்ந்துகொள்ளுமாறு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ப்ரான்க் விட்டஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில், கூகுள் மேப்பில் இருப்பிடப் பகிர்வு அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கமளிக்குமாறு கூகுள் இந்தியா நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று (ஜூலை 8) விசாரணைக்கு வந்தபோது, இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் வினய் நவரே, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வருண் மிஸ்ரா, போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் விக்ரம்ஜித் பானர்ஜி ஆகியோர் ஆஜரானார்கள்.
கூகுள் லொகேஷன் பகிர்வது என்பது வழக்கிற்கு உதவும் என்று தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு சார்பில் வாதிடப்பட்டது.
இதற்கு மறுப்புத் தெரிவித்த நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, “குற்றம் சாட்டப்பட்டவர்களின் நடமாட்டத்தை காவல்துறை தொடர்ந்து கண்காணிப்பதற்காக, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை எட்டிப்பார்க்கும் வகையில் ஜாமீன் நிபந்தனை இருக்க முடியாது.
ஜாமீன் பெறுவதற்கான நிபந்தனையாக கூகுள் லொக்கேஷனை விசாரணை அமைப்புகளிடம் குற்றம்சாட்டப்பட்ட நபர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என உத்தரவிட முடியாது.
கூகுள் லொகேஷனை பகிர்வது என்பது சட்டப்பிரிவு 21 இன் கீழ் தனியுரிமைக்கான உரிமையை மீறுவதாகும்” என்று தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை!
சென்னை ரிச்சி தெருவில் யூடியூபருக்கு கொலை மிரட்டல்… மூவர் கைது!