உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
ஒரு நாட்டில் இருக்கும் தங்கம் கையிருப்பு அந்த நாட்டின் வளமான பொருளாதாரத்தின் அடையாளம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.
அந்த வகையில் தங்கத்தை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் முதல் நாடாக அமெரிக்கா உள்ளது. உலகிலேயே அதிகபட்சமாக 8,133 டன் தங்கத்தை அமெரிக்கா சேமித்து வைத்திருக்கிறது.
தங்கம் கையிருப்பில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டிடம் 3,355 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள இத்தாலி 2,452 டன் தங்கத்தை வைத்துள்ளது. ஐரோப்பிய நாடான பிரான்ஸ் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. பிரான்ஸிடம் 2,437 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது.
மதிப்புமிகு மஞ்சள் உலோகம் இருப்பின் அடிப்படையில் ரஷ்யா ஐந்தாவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டிடம் 2,330 டன் தங்கம் உள்ளது.
ஆறாவது இடத்தை 2,113 டன் தங்க சேமிப்புடன் சீனா தன்வசமாக்கி இருக்கிறது. 1,040 டன் உடன் சுவிட்சர்லாந்து ஏழாவது இடத்திலும், எட்டாம் இடத்தில் ஜப்பான் 846 டன் தங்கத்துடனும் உள்ளன.
கடந்த மார்ச் மாத தகவலின்படி இந்தியாவிடம் 797 டன் தங்கம் கையிருப்பில் இருக்கிறது. இதனால் அதிகம் தங்கம் வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் ஒன்பதாவது இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
பத்தாவது இடத்தில் ஹாலந்து உள்ளது. அந்நாட்டிடம் 612 டன் அளவு தங்கம் கையிருப்பில் உள்ளது.
இந்த நிலையில் தங்கத்தை அதிக அளவில் வாங்கிக் குவித்து வருகிறது இந்திய ரிசர்வ் வங்கி. இதற்கான காரணம் குறித்து பேசியுள்ள இந்திய பொருளாதார நிபுணர்கள்,
“வெளிநாடுகளுடன் வர்த்தகம் செய்ய நாம் பெரும்பாலும் டாலரைத் தான் பயன்படுத்துவோம். அதற்கேற்ப அந்நியச் செலாவணியில் நாம் டாலர்களைப் பெருக்குவோம். ஒருவேளை, இந்த டாலர் மதிப்பு குறைந்தால், பிற நாடுகளுடன் வர்த்தகம் செய்ய தங்கம் பெரிதும் உதவும்.
தனி மனிதர்கள் தங்கள் தேவைக்கேற்ப நிலத்தில், தங்கத்தில் எனப் பலவற்றில் முதலீடு செய்வதுபோல, இந்திய ரிசர்வ் வங்கியும் தனது வர்த்தகப் பாதுகாப்புக்காகத் தங்கக் கையிருப்பை அதிகரித்து வருகிறது.
மேலும், உள்நாட்டு மக்களின் தேவைக்காகவும் தங்கத்தை அரசுதான் கொள்முதல் செய்கிறது. இதுவும் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு அதிகரிக்க ஒரு காரணம் ஆகும்.
இந்தியா மட்டுமல்லாமல், அனைத்து நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தில் முதலீடு செய்கின்றன. தங்கம் என்பது அனைத்து நாடுகளுக்குமான பொதுவான கரன்சி ஆகும். இதன் மதிப்பு அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது. ரஷ்யா போன்ற நாடுகள் டாலரை ஏற்காவிட்டாலும் தங்கத்தை ஏற்கும் என்பது குறிப்பிடத்தக்கது” என்கிறார்கள்.
ராஜ்
எஸ்.ஐ பணிகளுக்கான எழுத்துத் தேர்வு: முடிவுகள் எப்போது?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!