சீனாவின் வூஹான் நகரத்தில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைய உள்ளன. உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், கடந்த ஆண்டு இறுதியில் மெள்ள மெள்ள குறைய தொடங்கியது.
தற்போது, உலகமே கொரோனாவுக்கு பிந்தைய இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட நிலையில் சீனா மட்டும் இன்னமும் கொரோனாவோடு மல்லுக்கட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
அங்கு தினமும் 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அங்கு ஜீரோ கோவிட் பாலிசி என்கிற பெயரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா பரவல் வேகமெடுக்கும் போது கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்படுவதும் பரவல் குறைந்த பிறகு தளர்வுகள் குறைக்கப்படுவதும் அந்நாட்டு மக்களிடையே வெறுமையையும் கோபத்தையும் அதிகப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த வியாழக் கிழமை அன்று வடமேற்கு மாகாணமான ஜின் ஜியாங் மாகாண தலைநகர் உரும்கியில் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா ஊரடங்கு விதிமுறைகளால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி அடைக்கப்பட்டு இருந்ததால் பலர் வெளியேற முடியாமல் தவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்துள்ள சீன மக்கள் அதிபர் ஜி ஜின் பிங்கின் “ஜீரோ கோவிட்” பாலிசிக்கு எதிராக வீதிகளில் இறங்க தொடங்கியுள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகமான உய்குர் முஸ்லிம்கள் வசிக்கும் ஜின் ஜியாங் மாகாணம் சீனாவின் மற்ற பகுதிகளை விட அதிக நாட்கள் ஊரடங்கில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அந்த மாகாணத்தின் தலைநகரான உரும்கியில் மட்டும் கிட்டத்தட்ட 40 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பலர் 100 நாட்களுக்கும் மேலாக வீடுகளுக்குள் அடைக்கப்பட்டுள்ளனர். கோவிட் சோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்தாலும் ஊரடங்கில் அடைக்கப்படுவதாகவும் மக்கள் கொந்தளித்துள்ளனர்.
உரும்கியில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஷாங்காய் நகரில் நடந்த மெழுவர்த்தி ஊர்வலத்தில் மக்களின் கோபம் வெளிப்பட்டது. ஊரடங்கை தளர்த்தக் கோரி முழக்கங்களை எழுப்பிய மக்கள் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் அதிபர் ஜி ஜின் பிங்குக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள சின்ஹுவா பல்கலைக் கழகத்திலும் ஊரடங்குக்கு எதிராக போராட்டம் நடந்தது.
1989-ம் ஆண்டுக்கு பிறகு அந்நாட்டு மக்கள் மத்தியில் இப்படி ஒரு கொந்தளிப்பான சூழல் காணப்படுவதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஆளும் அரசு ஜீரோ கோவிட் பாலிசியை கைவிட தயாராக இல்லை. மக்கள் உயிர்வாழ ஜீரோ கோவிட் பாலிசி அவசியம் என அரசு அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
கடந்த மாதம் தான் சீனாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்றது. இதில் அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் மூன்றாவது முறையாக கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மக்கள் ஆட்சியின் மீது அதிருப்தி குரல் எழுப்பியுள்ளது ஜி ஜின்பிங்குக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஊரடங்குக்கு எதிராக போராடும் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜி ஜின்பிங்குக்கு எதிராக முழக்கமிடுவது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.
அப்துல் ராஃபிக்
”உண்மையிலேயே சின்னவர் நான் தான்!” : சீமான்
“இனி ஒரு உயிர் போனாலும் ஆளுநரே காரணம்” : அன்புமணி