இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 4 மாதங்களில் இருந்ததைவிட தற்போது 6 மடங்காக அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு பரவ தொடங்கி உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் 2 வருட போராட்டத்திற்குப் பிறகு கட்டுக்குள் வந்தது. ஆனாலும் பாதிப்பு முழுமையாக குறையவில்லை. தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை மட்டுமே குறைந்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியது. அதனுடன் சேர்த்து எச்3என்2 இன்புளூயன்ஸா வைரஸும் பரவ தொடங்கியது.
கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,389 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.46 கோடியாக (4,46,94,349) அதிகரித்துள்ளது. இதில், 98.80 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிற்கு ஓரே நாளில் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 4 மாநிலங்களில் தான் தொற்று பாதிப்பு அதிகமாக பதிவாகியுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் 15 ஆம் தேதி மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியது.
அதில், “ஒரு சில மாநிலங்களில் தொற்று நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் தொற்று அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. எனவே, தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தது.
மோனிஷா
5 நாட்களுக்கு மழை: வானிலை நிலவரம்!
பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் மனு!