கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதி உள்ளது.
சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதன்முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவியது.
கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது குறைய துவங்கியுள்ளது.
அதே நேரத்தில் சீனாவில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது.
தவிர, புத்தாண்டிற்கு பிறகு சீனாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் வேகமெடுக்கும் என்றும் அப்போது 15 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழக்ககூடும் என்றும் சீனாவில் உள்ள மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.
கடந்த நவம்பர் 2-ஆம் தேதி முதல் ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக வேர்லோடோ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இருப்பினும் இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
என்றாலும், சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது.
கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதி உள்ளார்.
மேலும், கொரோனா நிலவரம் குறித்து மூத்த அதிகாரிகளுடன் மற்றும் நிபுணர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
ஜெ.பிரகாஷ்
சுகேஷ் சந்திரசேகர் சொன்ன தகவல்: கலக்கத்தில் ஆம் ஆத்மி
இவ்வளவு சாதனைகள் செய்திருக்கிறோமா: இனிகோ இருதயராஜ் விழாவில் மெய்மறந்த முதல்வர்