சீனாவில் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் ஒரே வாரத்தில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொடும் என்று சுகாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சீனாவில் இருந்து 2019ல் உலக நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனால் உயிரிழப்புகள், பொருளாதார சரிவு என உலக நாடுகளே கடுமையாக பாதிக்கப்பட்டன.
கடந்த 3 வருடங்களாக கொரோனா பிடியில் சிக்கியிருந்த உலக நாடுகள் தற்போது நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கிய நிலையில், ஒமிக்ரானின் துணை வகையான பி.எப்.7 வேகமாக சீனாவில் பரவி வருகிறது.
குறிப்பாக பூஜ்ஜிய கோவிட் கொள்கை விலக்கி கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து குறைந்த அளவிலான இயற்கை நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சீன மக்களிடையே காட்டுத்தீ போல் கொரோனா பரவி வருவதாக உலக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

சீன அரசு டிசம்பர் 22ஆம் தேதி நிலவரப்படி, அன்றைய தினம் 4000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்றும், தொடர்ச்சியாக மூன்று தினங்களாக உயிரிழப்புகள் இல்லை என்றும் கூறுகிறது.
ஆனால் நிபுணர்களின் கூற்றுபடி நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் சீனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் சீன அரசு உண்மையை மறைக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தொற்று நோய்களுக்கான தேசிய மையத்தின் இயக்குனர் ஜாங் வென்ஹாங், ஷாங்காய் அரசாங்க ஆதரவு செய்தி நிறுவனமான ‘தி பேப்பரில்’, “ஒரு வாரத்தில் சீனாவில் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை உச்சத்தை தொடும்.
இது நமது முழு மருத்துவ வளங்களிலும் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த அலை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும். இந்த நோய்த்தொற்று தடுக்க முடியாதது. இதற்காக நாம் மனதளவில் தயாராகிக்கொள்ள வேண்டும் ” என்று மேற்கோள்காட்டியுள்ளார்.
சீன ஊடகமான ‘Qingdao Daily’ ஒரு சுகாதார அதிகாரியை மேற்கோள் காட்டி, “4,90,000- 5,30,000 புதிய தினசரி நோய்த் தொற்றுகளுடன் வேகமாக பரவக்கூடிய கட்டத்தில் இருக்கிறோம். இது அடுத்த இரு நாட்களில் 10 சதவிகிதம் என்ற விகிதத்தில் பரவல் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளது.
ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம், “இந்த வாரம் ஒரே நாளில் ஏறத்தாழ 3.7 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம்” என்று உயர்மட்ட சுகாதார ஆணையத்தின் மதிப்பீடுகளை குறிப்பிட்டு காட்டியுள்ளது.

சீனாவில் நோய்த்தொற்று நாளொன்றுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்கலாம். ஒரு நாளைக்கு 5 ஆயிரத்துக்கு அதிகமான இறப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த ஹெல்த் டேட்டா நிறுவனமான ஏர்ஃபினிட்டி கூறியுள்ளது. இது அரசாங்கத்தில் ஆதிகாரப்பூர்வ தகவலுக்கு முற்றிலும் மாறாக உள்ளது.
ஷாங்காயில் உள்ள மருத்துவமனை ஒன்று, “வணிக பகுதியான ஷாங்காய் பகுதியில் உள்ள 25 மில்லியன் மக்களின் பாதி பேர் பாதிக்கப்படுவார்கள்” என்று மதிப்பிட்டுள்ளது.
அதுபோன்று, “சீனா அடுத்த ஆண்டு ஒரு மில்லியனுக்கு அதிகமான கொரோனா இறப்புகளை எதிர்கொள்ளக்கூடும்” என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மருத்துவ நிபுணர்கள், தொற்று நோய் நிபுணர்கள், அரசியல் ஆய்வாளர்கள் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நேர்காணலின் மூலம் சீன அரசு முதியோர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தோல்வி அடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளது.
மூன்று வாரங்களுக்கு முன்பு தொடங்கிய முதியோர்களுக்கு தடுப்பூசி போடும் முயற்சி இன்னும் பலன் தரவில்லை.. சீனாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் விகிதம் 90 சதவிகிதத்துக்கு அதிகமாக இருந்தாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்ட விகிதம் 57.9சதவிகிதம் மட்டுமே. 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 42.3சதவிகிதம் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளை மேம்படுத்துதல் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதை விட சீனா கடந்த மூன்று ஆண்டுகளாக தனிமைப்படுத்தல் மற்றும் சோதனை விதிகளில் அதிக கவனம் செலுத்தியதாக சீன மக்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூரில் உள்ள ரோபி கிளினிக்கின் தொற்று நோய்க்கான நிபுணர் லியோங் ஹோ, “வைரஸ் வேகமாக பரவும் என்று போதுமான எச்சரிக்கை இருந்தபோதிலும் சீனா உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே இதுபோன்ற பரவலுக்கு காரணம்” என்று கூறியுள்ளார்.
சீனாவில் எந்தளவுக்கு கொரோனா பரவி, மருத்துவமனைகள் எல்லாம் நிரம்பியுள்ளன என்பதற்கு உதாரணமாக ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உரிய படுக்கை வசதி இன்றி சேரில் அமர்ந்தவாறு ஆக்சிஜன் உதவியுடன் மக்கள் சிகிச்சை பெறுவது அதில் பதிவாகியுள்ளது.
https://twitter.com/i/status/1605876307786506240
கோவிட் அலையின் தாக்கம் சீனா ,ஹாங்காங், வூஹான் மற்றும் ஆசியாவின் பிற பங்குச்சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரியா