ஒடிசா பாலசோர் பகுதியில் ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், பெங்களூரு – ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மூன்றும் விபத்துக்குள்ளானதில் இதுவரை 280 பேர் உயிரிழந்தனர். 900 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த ரயில் விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் சில வாரங்களுக்கு முன்பாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் கூட கூட்டம் அதிகமாக இருப்பதாக பயணிகள் சிலர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் ரயில்வே நிர்வாகத்தின் ட்விட்டர் பக்கங்களை டேக் செய்து புகார் தெரிவித்திருந்தனர்.
அப்போதே ரயில்வே அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுத்திருந்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையைக் குறைத்திருக்கலாம் என்று பயணிகள் குமுறி வருகிறார்கள்.
மே 24-ஆம் தேதி சோம்தத்தா சக்ரபோர்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிகளின் நிலையை இந்த வீடியோவில் பார்த்தால் உங்களுக்கு தெரியும்.
கஷ்டப்பட்டு ரிசர்வேஷன் டிக்கெட் பெற்றவர்கள் தற்போது ரயிலில் பயணம் செய்யும் போது குற்றம் செய்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இந்த ரயில்வே நிர்வாகத்தை நினைத்தால் அவமானமாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மே 15-ஆம் தேதி பிக்ராம் கிஷோர் பெகாரா தனது ட்விட்டர் பக்கத்தில், “கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் கிளாஸ்க்கு பணம் செலுத்தி முன்பதிவு செய்திருந்தாலும்… சாதாரண பெட்டிகளில் பயணம் செய்வது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்தவர்கள் ஸ்லீப்பர் பெட்டியை ஆக்கிரமித்து விட்டார்கள். இது அவர்களுடைய தவறு இல்லை.
மேற்கு வங்கம், ஒடிசாவை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் இந்த ரயிலை நம்பியுள்ளனர். ஆனால் இந்த ரயிலில் குறிப்பிட்ட அளவு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மட்டுமே உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ரயில்வே நிர்வாகம், “உங்களது தொலைபேசி எண் மற்றும் பயண விவரங்களை எங்களுக்கு அனுப்புங்கள். http://railmadad.indianrailways.gov.in அல்லது 139 என்ற எண்ணுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவியுங்கள்” என்று தெரிவித்துள்ளது.
மார்ச் 26-ஆம் தேதி நாகராஜ் என்பவர், “கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஸ்லீப்பர் பெட்டியில் முன்பதிவு செய்யப்படாத பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இயற்கை உபாதைகள் கழிக்க கூட முடியவில்லை.
இதனை சரிசெய்வதற்காக இந்திய ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ரயில்வே அமைச்சர் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பாரா” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2022-ஆம் ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி கமீலா ராய் சவுத்ரி, “கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பாதுகாப்பு, சுகாதாரம் ஆகியவை அச்சமூட்டுகிறது.
ரயிலில் பயணம் செய்வது மிகவும் மோசமான உணர்வை ஏற்படுத்துகிறது. பயணிகள் சுவாசிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். மூச்சு திணறல் உள்ள நோயாளி ஒருவர் என்னுடன் பயணம் செய்கிறார். இந்திய ரயில்வே நிர்வாகத்தை நினைத்து வெட்கப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான நிலையில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும்படியும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்த ட்விட்டர் பதிவுகள் சமூகவலைதளங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
பயணிகளிடம் இருந்து இவ்வளவு புகார்கள் பொதுத் தளத்தின் மூலம் பகிரப்பட்டும் ரயில்வே அமைச்சரும், நிர்வாகமும் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
செல்வம்
ரயில் விபத்தில் சிக்கிய ஆந்திர பயணிகள்: உத்தரவிட்ட முதல்வர்!
ஒடிசா விபத்து: கவாச் சிஸ்டம் என்னாச்சு?
