சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
சூடான் நாட்டில் உள்நாட்டு போரால் 3,000 இந்தியர்கள் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். போரால் தவித்து வரும் இந்தியர்களை பத்திரமாக மீட்க இந்திய அரசு ‘ஆபரேஷன் காவேரி’ என்ற பெயரில் மீட்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல் மூலம் மீட்பு பணியை துரிதப்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சூடானில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 84 பேர் சிக்கி இருப்பதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்தது. அவர்களை பத்திரமாக மீட்டு வர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில் சூடானில் சிக்கியுள்ள தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக இந்திய வெளியுறவுத் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
முதல் பட்டியலில் 84 தமிழர்கள் என்றும் இரண்டாவது பட்டியலில் 136 பேர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. 400 தமிழர்கள் வரை அங்கு இருப்பதாக சூடான் நாட்டு இந்திய தூதரகம் மூலம் தெரியவந்துள்ளது.
இந்தத் தகவல் அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினார்.
அதில், தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் வரை சூடானில் சிக்கித் தவித்து வருவதாகவும் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதற்கான உதவிகளை எதிர்பார்த்து இருப்பது குறித்து பிரதமரின் கவனத்துக்குத் தாம் கொண்டுவர விரும்புவதாகவும்,
சூடானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களின் முதல் தொகுதி ஐஎன்எஸ் சுமேதா என்ற கப்பலில் இருக்கும் நிலையில் அவர்களின் உறவினர்களிடமிருந்து மாநில அரசுக்கு அவசர அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் குறித்த தகவல்களைப் பெறுவதற்கும், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக வெளியேற்றுவதற்கும் அனைத்து உதவிகளையும் வழங்கவும், வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் சூடானில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் இணைந்து செயல்படவும் தமிழ்நாடு அரசு தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
அங்குள்ள தமிழர்களை மீட்க மத்திய அரசுடன் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான், வெளிநாடு வாழ் தமிழர்கள் துறை ஆணையர் ஜெசிந்தா ஆகியோர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் வருவாய்த்துறை ஆணையரகத்திலும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு அறைகளுக்கான தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 011-24193100, 9289516711 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை 9600023645 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில், சூடானின் பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த இந்தியர்கள் சுமார் 500 பேர் மீட்கப்பட்டு சூடான் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர். அதன்பின், இந்தியாவின் கடற்படை கப்பலான ஐஎன்எஸ் சுமேதா உதவியுடன் அவர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டனர்.
ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றி கொண்டு நேற்று மாலை புறப்பட்ட தனி விமானம் புது டெல்லிக்கு வந்துள்ளது என்று மத்திய வெளிவிவகாரத்துறை இணையமைச்சர் முரளீதரன் தெரிவித்துள்ளார். இதேபோன்று இந்தியர்களை சூடானில் இருந்து ஜெட்டா நகருக்கு கொண்டு வருவதற்காக, சூடான் நாட்டின் துறைமுகத்தில் ஐஎன்எஸ் தேக் கடற்படை கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
போராட்டம் வீண்: சொந்த அணியால் நொந்துகொண்ட விராட்கோலி
வங்கதேச துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி!
சிறப்புக் கட்டுரை: ஐந்து பெருநிறுவனங்களை (Big 5) மட்டும்தான் உடைக்கவேண்டுமா?