காங்கிரஸ் தலைவர் ரேஸில் மல்லிகார்ஜுன கார்கே?

இந்தியா

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கேவும் இன்று (செப்டம்பர் 30) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில், மறுபக்கம் அடுத்த காங்கிரஸ் தலைவருக்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இதில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை தலைவர் பதவிக்கு கொண்டு வர கட்சித் தலைமை விரும்பியது.

ஆனால் அவர் முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்க மறுத்துவிட்டதால் சோனியா காந்தி அதிருப்தி அடைந்தார்.

இதனால் நேற்று சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து மன்னிப்பு கேட்ட அசோக் கெலாட் சுமார் 90 நிமிடங்கள் வரை பேசினார்.

தொடர்ந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை. முதல்வர் பதவியில் நீடிப்பது தொடர்பாகச் சோனியா காந்தி முடிவெடுப்பார்” என்று கூறினார்.

இதனிடையே, மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் மாநிலங்களவை எம்.பி.யுமான திக் விஜய் சிங் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாகத் தெரிவித்து கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து நேற்று வேட்பு மனுவைப் பெற்றுக் கொண்டு சென்றார்.

அதுபோன்று திருவனந்தபுரம் எம்.பி.சசி தரூரும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்நிலையில் நேற்று திக் விஜய் சிங்கும், சசி தரூரும் சந்தித்துப் பேசினர்.

இதுகுறித்து சசிதரூர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திக் விஜய் சிங் என்னைச் சந்தித்துப் பேசினார்.

எங்களுக்கு இடையே இருப்பது எதிரிகளுக்கு இடையேயான சண்டை அல்ல. சகாக்கள் இடையேயான நட்பு ரீதியிலான போட்டி.

நாங்கள் இருவரும் விரும்புவது ஒன்றுதான். எங்களுள் யார் வெற்றி பெற்றாலும், இந்தியாவில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்” என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று வரை இந்த இருவருக்கும் இடையே போட்டி நிலவி வந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே,

செப்டம்பர் 30ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்வார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியின் மறைமுக ஆதரவுடன் கார்கே தலைவர் பதவியில் போட்டியிடுவார் என்றும் சோனியா வழிகாட்டுதலின் படி கார்க்கே தான் வழிநடப்பார் என்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

அதன்படி தலைவர் தேர்தலுக்கு திக் விஜய் சிங், சசி தரூர், மற்றும் மல்லிகார்ஜுன கார்கே மூவரும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் தேர்தல் போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், பிருத்விராஜ் சவான், பூபிந்தர் ஹூடா மற்றும் மணீஷ் திவாரி உள்ளிட்ட சில ஜி-23 தலைவர்கள் ஆனந்த் சர்மாவின் இல்லத்தில் நேற்றிரவு சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து விவாதித்துள்ளனர்.

பிரியா

வணிகவரி சோதனை பழிவாங்கும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறதா? அமைச்சர் மூர்த்தி பதில்!

கிச்சன் கீர்த்தனா : பனிவரகு – மஷ்ரூம் – டொமேட்டோ சூப்!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.