ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்ற சந்தோக் சிங் எம்.பி. உடல் நல குறைவு காரணமாக இன்று (ஜனவரி 14) திடீரென காலமானார்.
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், 2024 தேர்தலில் வெற்றி பெறவும் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அவரது பயணத்தில் அந்தந்த மாநில முக்கிய அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள்,எம்.எல்.ஏ.க்கள் திரை பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சந்தோக் சிங் இன்று காலமானார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே ஃபில்லூர் பகுதியில் யாத்திரை நடந்து கொண்டிருக்கும் போது, அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் பக்வாரா பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அதுபோன்று ராகுல் காந்தியும் மருத்துவமனைக்கு விரைந்தார். ஆனால் சந்தோக் சிங் மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சந்தோக் சிங்கின் அகால மரணம், கட்சிக்குப் பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.
77 வயதான சந்தோக் சிங் 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா