பாஜக அரசு பொதுமக்களுக்கு காதில் பூ சுற்றி வருகிறது என்பதை உணர்த்தும் விதமாக காதில் பூ வைத்து கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கர்நாடக மாநிலத்தில் இரண்டு மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார்.
முதன் முறையாக கர்நாடக அரசு சார்பில் 3 லட்சம் கோடி ரூபாய்க்கான பட்ஜெட் இது. மேலும் முதன் முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் வரும் நிதி ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கடன் 77,750கோடி ரூபாய் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்று(பிப்ரவரி 17) காலை 10:30 மணி முதல் ராகு காலம் என்பதால் முதல்வர் தனது உரையை 10:15க்கு தொடங்கினார். ராகு காலம் முடிவதற்குள் அவர் தனது உரையை முடிக்க முடிவு செய்த காரணத்தினால் மிகவும் அவசர அவசரமாக தனது உரையை படித்தார்.
முதல்வர் பட்ஜெட் உரையை துவங்கிய போது எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமையா உள்பட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் காதில் பூ சூடி அமர்ந்திருந்தனர்.
பூவை எடுத்து விட்டு அமருமாறு முதல்வர் கோரிக்கை விடுத்த நிலையில், சித்திராமையா பாஜக அரசு பொதுமக்கள் காதில் போலியான திட்டங்கள் மூலமாக பூ சூட்டுகிறது. அதை மக்களுக்கு எடுத்துரைக்க தாங்கள் காதில் பூ வைத்து வந்துள்ளோம் என்றார்.
அப்போது பாஜக மற்றும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இடையே விவாதம் ஏற்பட்டதால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து காதில் பூ வைத்துஅவையில் அமர்ந்திருந்த நிலையில் தனது பட்ஜெட் உரையை முதல்வர் தொடர்ந்தார்.
கலை.ரா
சர்ச்சை பேச்சால் சிக்கிய சேத்தன் சர்மா ராஜினாமா!
ட்விட்டர் இந்தியா நிறுவனங்களை மூடிய எலான் மஸ்க்: ஊழியர்கள் அதிர்ச்சி!