கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வருகிறோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கும் நாட்டில் பாஜ.க ஆட்சி தான் என மாநிலங்களவையில் மோடி பேசியுள்ளார்.
மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்றுடன் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாநிலளங்களவையில் இன்று (ஜூலை 3) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பேசினார்.
அரசியலமைப்பு சட்டம் கலங்கரை விளக்கம் போன்றது!
அவர், “கடந்த இரண்டரை நாட்களில், சுமார் 70 எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்றனர். அதற்காக எம்.பி.க்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சுதந்திர இந்தியா மற்றும் நாடாளுமன்றப் பயண வரலாற்றில், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக 3வது முறையாக ஒரு அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. இது ஒரு சாதாரண விஷயம் அல்ல என்பதை நான் உணர்கிறேன்.
அரசியலமைப்பு சட்டத்தின் 75வது ஆண்டுக்குள் இருப்பது திருவிழா போன்றது. எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு சட்டம் கலங்கரை விளக்கம் போல உதவும். இந்தியாவின் அரசியல் சாசனத்தை எப்போதும் புனித நூலாக கருதுபவன் நான். அம்பேத்கரின் கொள்கைகளை நாங்கள் பின்பற்றுவதால் தான் என்னைப் போன்ற பலர் இங்கு வந்துள்ளனர்.
அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜக ஆட்சி தான்!
விவசாயிகளின் தேவைகளை கண்டறிந்து கடந்த 10 ஆண்டுகளில் அவற்றை நிறைவேற்றியுள்ளோம். விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலையை இதுவரை இல்லாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்தோம்.
அடுத்த ஐந்தாண்டுகளில் வறுமையை எதிர்த்து இந்த நாடு வெற்றி பெறும். சிறுநகரங்கள் கூட வரலாறு காணாத வளர்ச்சியை சந்திக்க உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். அப்போது, அதன் தாக்கம் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வருகிறோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கும் நாட்டில் பாஜ.க ஆட்சி தான்.
காங்கிரஸின் ஆட்சிக் காலத்தில், 60,000 கோடி ரூபாய் விவசாயிகளின் கடன் தள்ளுபடி திட்டம் இருந்தது, ஆனால் பயனாளிகள் பட்டியலில் தேவைப்படும் சிறு விவசாயிகளின் பெயர்கள் கூட சேர்க்கப்படவில்லை.
பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு இந்தியா தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது, இன்று அதன் விளைவுகளை காண்கிறோம். பெண்களின் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய துறைகளிலும் கவனமாக பணியாற்றியுள்ளோம். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளில் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை மிகவும் கவலை அளிக்கிறது.
காங்கிரஸ் தோல்வியை கார்கே ஏற்றுக் கொண்டார்!
இந்த நாட்டு மக்களின் ஞானம் மற்றும் புத்திசாலித்தனம் குறித்து நாங்கள் பெருமைப்படுகிறோம். எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை மக்கள் தோற்கடித்து உள்ளனர். வஞ்சக அரசியலை நிராகரித்து மக்கள் நம்பிக்கை அரசியலில் வெற்றி முத்திரை பதித்தனர். ஆனால் தேர்தலில், மக்கள் அளித்த தோல்வியை ஏற்க சில எதிர்க்கட்சிகள் மறுக்கின்றன. பாஜக கூட்டணியின் வெற்றியை இருட்டடிப்பு செய்ய எதிர்க்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.
தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கான பழியை சுவர் போல நின்று கார்கே தாங்கிக் கொண்டார். வேறு ஒருவருக்கு செல்ல வேண்டிய தோல்வியின் பழியை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். ஒரு குடும்பம் பாதுகாப்பாக இருக்க கார்கே போன்ற பட்டியலினத்தை சேர்ந்தவர்களை பயன்படுத்துகின்றனர். காங்கிரஸ் கட்சி எஸ்சி, எஸ்டி, ஓபிசிக்கு எதிரான மனப்பான்மை கொண்டது” என்றார் மோடி.
’பொய் பேசுவதை நிறுத்துங்கள்’ – எதிர்க்கட்சிகள் முழக்கம்!
அப்போது குறுக்கிட்டு பேச அவையில் மல்லிகார்ஜுன கார்கே அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு அனுமதி தரப்படவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி எம்பிக்கள், ’பொய் பேசுவதை நிறுத்துங்கள்’ என முழக்கம் எழுப்பியபடி வெளிநடப்பு செய்தனர்.
அப்போது பிரதமர் மோடி, “பொய்யைப் பரப்புபவர்களுக்கு உண்மையைக் கேட்கும் சக்தி இல்லை என்பதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. உண்மையை எதிர்கொள்ளும் தைரியம் இல்லாதவர்களுக்கு பதில்களைக் கேட்கும் தைரியம் இல்லை.” என்று விமர்சித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2023 – 2024 ஒப்பீடு : முதல் அரையாண்டில் தமிழ் சினிமா சாதித்ததா? சரிந்ததா?
ராகுல் காந்தியின் கூற்றை எதிரொலித்த விஜய் : செல்வப்பெருந்தகை