பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் இருவருமே தாங்கள் தான் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 8ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 28 உயிர்கள் பலியானதால் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலைக்கு இடையே பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நேற்று முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் மொத்தம் 336 இடங்கள் இருக்கின்றன. இதில் 266 இடங்கள் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்படும். மீதமுள்ள 70 இடங்கள் வெற்றி பெற்ற கட்சிகளின் பெரும்பான்மைக்கு ஏற்ப பகிர்ந்தளிக்கப்படும். ஒட்டுமொத்தமாக 169 இடங்களை கைப்பற்றும் கட்சியே ஆட்சி கட்டிலில் அமரும்.
வாக்குப்பதிவு எண்ணிக்கையில் தற்போது வரை 265 இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமான ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. இதில் முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இன்று காலை 7.30 மணி நிலவரப்படி நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (PML-N) ஒரு கட்சியாக இதுவரை 64 இடங்களில் வென்றுள்ளது. அதே வேளையில் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டதால், அவரது PTI கட்சியினர் சுயேட்சையாக போட்டியிட்டனர். இம்ரான் கான் ஆதரவு பெற்ற சுயேட்சைகள் இதுவரை 98 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
படுகொலை செய்யப்பட்ட பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) 51 இடங்களில் வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் மற்றும் இம்ரான் கான் இருவருமே தாங்கள் தான் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.
லாகூரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே கூடியிருந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய ஷெரீப், “தேர்தலுக்குப் பிறகு பாகிஸ்தான் முஸ்லீம் லீக் இன்று நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உள்ளது, இந்த நாட்டை அபாயச் சூழலில் இருந்து வெளியே கொண்டு வருவது நமது கடமை.
சுயேச்சையாக இருந்தாலும் சரி, கட்சியாக இருந்தாலும் சரி, யார் வெற்றி பெற்றாலும் அவர்களை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் எங்களுடன் காயமடைந்த இந்த தேசம் மீண்டும் தனது சொந்த காலில் நிற்க உதவுமாறு அழைக்கிறோம்” என்று ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அவரது கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெறத் தவறியுள்ள நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க அவர் காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே இம்ரான் கான் பேசுவது போன்று ஏஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்ட வீடியோவை பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சி சார்பில் அவரது எக்ஸ் பக்கத்தில் இன்று பகிரப்பட்டுள்ளது.
அதில், “நீங்கள் அனைவரும் வாக்களிக்க வருவீர்கள் என்று நான் நம்பினேன். அந்த நம்பிக்கையை நீங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள். உங்கள் மகத்தான வாக்குப்பதிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஷெரீப்பின் வெற்றி கூற்றை யாரும் ஏற்க மாட்டார்கள். அவர் நம்மை விட குறைவான இடங்களை மட்டுமே வென்றுள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற எனது ஆதரவாளர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகள். இதனை கொண்டாடுங்கள்” என்று இம்ரான் கான் பேசுவது போன்று வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெரும் குழப்பங்களுக்கு மத்தியில் தான் பொதுத்தேர்தல் நடந்துள்ள நிலையில், தற்போது வாக்குப்பதிவு எண்ணிக்கையில் அது நீடிக்கிறது.
அதிக இடங்களில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் வெற்றி பெற்றாலும், ஆட்சியில் அமரப்போவது யார் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ சோதனை!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!