மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஷ் பூஷன் சரண் சிங்கிற்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.
மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் புகார் அளித்ததாக இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்.பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க கோரி,
வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் டெல்லியில் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல்துறை கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் டெல்லி காவல்துறை கடந்த ஜூலை 15 ஆம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதனை ஆய்வு செய்த நீதிமன்றம் பிரிஜ் பூஷன் சரன் சிங்கை ஜூலை 18-ல் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.
அப்போது விசாரணைக்கு ஆஜரான பிரிஜ் பூஷனுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் 2 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி வழக்கு விசாரணையை ஜூலை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
ஆனால், பிரிஜ் பூஷன் அதிகாரமிக்க நபர் என்பதால், அவர் ஜாமீனில் இருக்கும் போது சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என டெல்லி காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
தொடர்ந்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பிரிஜ் பூஷனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது.
குறிப்பாக குற்றம்சாட்டப்பட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங் தனக்கு எதிரான சாட்சிகளையோ, புகார்தாரர்களையோ கலைக்கவோ, மிரட்டவோ முற்படக்கூடாது.
நீதிமன்றத்தின் உரிய அனுமதி பெறாமல் நாட்டை விட்டு பயணம் மேற்கொள்ளக்கூடாது. பிணைத்தொகையாக 25 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும் ஆகிய நிபந்தனைகளை விதித்த நீதிமன்றம் இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
மோனிஷா
ஓ.பி.ரவிந்திரநாத் வழக்கில் மேல்முறையீடு செய்வோம்: ஓபிஎஸ்
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பத்திரப் பதிவு ரத்து: நயினார் பாலாஜி