எவ்வளவுப்பா போனஸ் வேணும்? வேணுங்குறதை எடுத்துக்கோங்க!

Published On:

| By Kumaresan M

சீன நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு 70 கோடியை போனஸாக வழங்கியுள்ளது. பணத்தை மேஜையில் கொட்டி வைத்து எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் Henan Mining Crane Co நிறுவனம் கிரேன் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் சீன புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 29 ஆம் தேதி தனது ஊழியர்களுக்கு போனஸ் வழங்க முடிவு செய்தது. வித்தியாசமான முறையில் தனது ஊழியர்களுக்கு போனஸ் அளிக்கவும் முடிவு செய்தது.

அதன்படி, பெரிய அரங்கம் ஒன்றில் மேஜையில் பணத்தை கொட்டி வைத்து எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து கொள்ள சொன்னது. ஆனால், 15 நிமிடம்தான் வழங்கப்படும். அதற்குள் எவ்வளவு வேண்டுமோ பணத்தை மூட்டையாக கட்டி எடுத்துக் கொள்ளலாம். ஒரு ஊழியர் அதிகபட்சமாக ஒரு லட்சம் யூவானை எடுத்து லட்சாதிபதி ஆகியுள்ளார். இதன் இந்திய மதிப்பு 12.07 லட்சம் ஆகும். ஒரே நாளில் கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் ஊழியர்களுக்கு போனசாக வழங்கப்பட்டது.

இது தொடர்பான வீடியோ சீன சமூகவலைத் தளமான Douyin மற்றும் Weibo- வில் பரவியது. சிலர் அந்த நிறுவனத்தை பாராட்டினாலும் ஒரு சிலர் ஊழியர்களையும் பணத்தையும் அவமதிப்பதாக பதிவிட்டுள்ளனர்.

இந்த நிறுவனம் இப்படி செய்வது இது முதன்முறையல்ல. கடந்த 2023 ஆம் ஆண்டும் தனது ஊழியர்களுக்கு ஆண்டு இறுதியில் விருந்து வழங்கி கை நிறைய பணம் கொடுத்து அழகு பார்த்தது.

மத்திய சீனாவில் ஹெனான் நகரில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது. 3,500 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். கிரேன் உள்ளிட்ட 6 வகையான கனரக கருவிகளை இந்த நிறுவனம் தயாரிக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share