நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 68,670 கோடி (686.70 பில்லியன்) அலகுகளாக உயர்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டு இதே காலகட்டத்தில், உள்நாட்டு நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி 63,070 கோடி (630.70 பில்லியன்) அலகுகளாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டில் 8.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் – அக்டோபர் காலகட்டத்தில், நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி (உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி சேர்த்து), கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 11.16 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள வெப்பம், வட மாநிலங்களில் காலம் தாழ்ந்த பருவநிலை மற்றும் கரோனாவுக்கு பின் முழுவீச்சில் இயங்கி வரும் வணிக நடவடிக்கைகள் உள்ளிட்ட காரணங்களால், நிலக்கரி சார் மின் உற்பத்தி அதிகரித்திருப்பதாக மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார நுகர்வு மற்றும் மின்தேவை ஒருபுறம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த ஆண்டு அக்டோபரில், 25.40 மெட்ரிக் டன்னாக இருந்த நிலக்கரி இறக்குமதி, நடப்பாண்டு அக்டோபரில் 46.57 சதவிகிதம் சரிந்து, 13.57 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது. நிலக்கரி உற்பத்தியை மேலும் அதிகரிக்க அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், நிலக்கரி இறக்குமதி சார்பு நிலைமையை குறைக்கும் நடவடிக்கையிலும் அரசு இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…