இளம் பருவத்தினர் சம்பந்தப்பட்ட பாலுறவு வழக்குகளை நீதிபதிகள் விசாரிப்பதில் சிக்கல்கள் ஏற்படுவதால் போக்சோ சட்டங்களின் வயதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.
சிறார் நீதிக்கான உச்சநீதிமன்ற குழுவால் இரண்டு நாட்கள் நடத்தப்படும் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் தொடங்கியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் 10 ஆண்டுகளை நிறைவு செய்யும் போக்சோ வழக்குகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசும்போது, “பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் வயதானது 1940-ஆம் ஆண்டு 16 வயதாக இருந்தது. பின்னர் 2012-ஆம் ஆண்டு முதல் 18 வயதாக உயர்த்தப்பட்டது.
போக்சோ தொடர்பான வழக்குகளை பல நீதிபதிகள் விசாரிப்பதில் சிரமங்கள் ஏற்படுவதை நான் கவனித்திருக்கிறேன்.
போக்சோ சட்டமானது 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான அனைத்து பாலியல் செயல்பாடுகளையும் குற்றம் என்கிறது. குறிப்பாக, இரண்டு பேர் ஒப்புதலுடன் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் இச்சட்டம் குற்றமாக்குகிறது. இந்த விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் வயதை நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்து முக்கிய முடிவை எடுக்க வேண்டும்.” என்றார்.
இளம் பருவத்தினர் சம்பந்தப்பட்ட போக்சோ சட்டங்களை கையாள்வதற்கான சட்டதிருத்தத்தின் அவசர தேவைக்கு பல உயர்நீதிமன்றங்கள் அழைப்பு விடுத்துள்ள நேரத்தில் தலைமை நீதிபதியின் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் போக்சோ தொடர்பான வழக்கின்போது, சென்னை உயர்நீதிமன்றம் போக்சோ சட்டத்தில் பாலுறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
உலககோப்பை கால்பந்து: இங்கிலாந்தை அதிரவைத்த பிரான்ஸ்
காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்: சர்ச்சையான ஆர்யா பட டைட்டில்!