நித்யானந்தாவின் கைலாசா நாட்டுடன் அமெரிக்காவின் நெவார்க் நகரம் மேற்கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள திருவண்ணாமலையில் பிறந்தவர் நித்யானந்தா. இவர் கர்நாடகாவில் கற்பழிப்பு மற்றும் கிரிமினல் வழக்குகளில் ஈடுபட்டதாக காவல்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். பின்னர் கைலாசா என்ற நாட்டை நிறுவியதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வந்தார்.

கைலாசா நாடானது கடந்த சில வாரங்களுக்கு முன்பாக அமெரிக்காவில் உள்ள நெவார்க் நகரத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டது. பின்னர் அந்த ஒப்பந்தத்தை நெவார்க் நகரம் ரத்து செய்தது.
இதுகுறித்து நெவார்க் பத்திரிகை செயலாளர் சூசன் கரோஃபாலோ கூறும்போது, “கைலாசாவைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளைப் பற்றி நாங்கள் அறிந்தவுடன் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி கைலாசா நாட்டுடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கைலாசா நாடு தனது இணையதளத்தில் அமெரிக்காவுடனான இருதரப்பு ஒப்பந்தத்தை தாங்கள் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெனிவாவில் ஐ.நா குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கைலாசா நாட்டைச் சேர்ந்த இரண்டு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அதில் கைலாசா நாட்டின் ஐநாவிற்கான தூதர் விஜயப்ரியா நித்யானந்தா பேசும்போது, “இந்தியாவில் நித்யானந்தா இந்து விரோத சக்திகளால் துன்புறுத்தப்பட்டார். அவருக்கு தகுந்த பாதுகாப்பை ஐநா வழங்க வேண்டும்.” என்று தெரிவித்தார். அவரது இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து கைலாசா நாட்டின் பிரதிநிதியின் பேச்சு குறித்து விளக்கமளித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம்,
“கைலாசா குடியரசின் பிரதிநிதியின் பேச்சு பொருத்தமற்றது. எனவே அது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படாது. இது போன்ற பொது நிகழ்ச்சிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம்.
அதனடிப்படையில் தான் கைலாசாவின் பிரதிநிதி கலந்து கொண்டார்.” என்று தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக தாம் பேசவில்லை என்று விஜயப்பிரியா நித்யானந்தா ட்விட்டரில் ஒரு விளக்கத்தை வெளியிட்டார்.
அதில், “ஐநாவில் தாம் பேசியதை சில இந்து விரோத ஊடகங்கள் தவறாகப் புரிந்து கொண்டு திரித்து வெளியிடுகிறார்கள். இந்தியாவை கைலாசா உயர்வாகவும் அதன் குருபீடமாகவும் மதிக்கிறது.
இந்தியாவில் நித்யானந்தாவிற்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் கருத்து வெளியிடுபவர்கள் மீது இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
முழு காமெடி ஜானரில் ஐஸ்வர்யா ராஜேஷின் ‘சொப்பன சுந்தரி’!
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
3வது டெஸ்டில் தோல்வி: நழுவும் இறுதிப்போட்டி வாய்ப்பு… இந்தியா தகுதி பெற என்ன செய்ய வேண்டும்?