இளைஞர்கள் சிகரெட் பிடிப்பதைத் தடுக்க நியூசிலாந்து அரசு சிகரெட்டிற்கு வாழ்நாள் தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளது.
வருங்கால தலைமுறையினர் புகையிலை பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டத்தைப் பாராளுமன்றத்தில் நேற்று (டிசம்பர் 13) நிறைவேற்றியுள்ளது நியூசிலாந்து அரசு.
சிகரெட் மற்றும் புகையிலைக்கு எதிராக இயற்றப்பட்ட சட்டங்களில் உலகளவில் இதுவே கண்டிப்பான சட்டமாகப் பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட சட்டத்தின் படி 2009 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த யாருக்கும் சிகரெட் விற்கக்கூடாது. ஆனால் சட்டத்தையும் மீறி விற்பனை செய்தால் 95,910 டாலர் (இந்திய மதிப்பில் 79,12,546.20) அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சட்டத்தின் படி 2009 ஆம் ஆண்டிற்குப் பின் பிறந்த இளைஞர்கள் அவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது புகையிலையில் பயன்படுத்தப்படும் நிகோடின் அளவையும் புகையிலை விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகளின் அளவையும் 90 சதவீதம் குறைத்துவிடும்.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பின் பேசிய நியூசிலாந்து சுகாதாரத் துறை அமைச்சர் ஆயிஷா வெரால், “இந்த சட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள்.
மேலும், மாரடைப்பு, புற்றுநோய், பக்கவாதம் போன்ற புகைபிடித்தல் காரணமாக ஏற்படும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட மாட்டார்கள்.
அதுமட்டுமின்றி புகை பிடிப்பதற்கான வயது வரம்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
தற்போது சிகரெட் வாங்குவதற்கு 13 வயது குறைந்தபட்ச வயதாக இருக்கும் நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு 63 வயதுதான் சிகரெட் வாங்குவதற்குக் குறைந்தபட்ச வயதாக இருக்கும்.
இப்படி புகையிலை பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து விடும்” என்று பேசினார். ஆனால் 2025 ஆம் ஆண்டுக்குள் நியூசிலாந்தைப் புகையிலை இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
ஆனால் இந்த சட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்புகளும் எழுந்துள்ளது. இந்த சட்டத்தின் மூலம் சில்லறை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
ஈஷாவுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ்: ரத்து செய்த உயர்நீதிமன்றம்
என் உயரம் எனக்கு தெரியும்: அமீரின் அரசியல் பதில்!