சிரியாவில் ஹாமா என்ற நகரத்தில் அருகில் சுகேலாபியா என்ற சிறிய நகரம் உள்ளது. இங்கு ஏராளமான கிறிஸ்தவ மக்கள் வசிக்கின்றனர். நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால், இந்த நகரம் களைக் கட்டியிருந்தது. நகரத்தின் பல இடங்களில் கிறிஸ்துமஸ் மரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், சில கிறிஸ்துமஸ் மரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இதனால், கிறிஸ்தவ மக்கள் அதிர்ந்து போனார்கள். ஏராளமான கிறிஸ்தவ மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். விசாரணையில் அன்சால் அல் தாவிட் அமைப்பை சேர்ந்த வெளிநாட்டு போராட்டக்காரர்கள் கிறிஸ்துமஸ் மரங்களுக்கு தீ வைத்தது தெரிய வந்தது. தகவல் பரவியதையடுத்து, தலைநகர் டமாஸ்கஸ்சிலும் போராட்டம் வெடித்தது. தங்களது சொந்த நாட்டில் தங்களது மத நம்பிக்கையின் அடிப்படையில் வாழ உரிமை உண்டு என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
இதையடுத்து, தற்போது சிரியாவை கைப்பற்றியுள்ள ஹயாத் தாகிர் அல் ஷாம் அமைப்பை சேர்ந்த பிரதிநிதிகள், கிறிஸ்தவ மக்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். கிறிஸ்தவ மரத்தை எரித்தவர்கள் சிரிய மக்கள் கிடையாது. வெளிநாட்டை சேர்ந்த தீவிரவாதிகள். அவர்களுக்கு தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, புதிய கிறிஸ்துமஸ் மரம் அதே இடத்தில் நிறுவப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும், ஹெச்.டி.எஸ் அமைப்பு தரப்பில் ,சிரியாவில் அனைத்து மைனாரிட்டி மக்களும் சுதந்திரமாக வாழ வழிவகை செய்யப்படும். இஸ்லாமிய மதம் யார் மீதும் திணிக்கப்படாது. சிரியாவை சேர்ந்த மைனாரிட்டி மக்கள் வெளிநாடுகளில் இருந்தால், உடனடியாக தாய்நாடு திரும்பி தங்கள் சொத்துக்களை பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு சிரிய மக்கள் தொகையில் 10 சதவிகிதம் கிறிஸ்தவ மக்கள் இருந்தனர். தற்போது, 2 சதவிகிதமாக குறைந்த விட்டது. கிட்டத்தட்ட 7 லட்சம் கிறிஸ்தவ மக்கள் சிரியாவில் வாழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே போல, 10 ஆயிரம் யூத மக்களும் சிரியாவில் வசிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
ஊட்டிக்கு தனியாத்தான் போகனும் போல… பப்லு காதலித்த பெண்ணுக்கு திருமணம் முடிந்தது!
எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் எடப்பாடி மரியாதை… தலைவர்கள் புகழஞ்சலி!