அட்லாண்டிக் பெருங்கடலில் சீன உளவு பலூனை அமெரிக்க போர் விமானங்கள் இன்று (பிப்ரவரி 5) சுட்டு வீழ்த்தியது.
மூன்று பேருந்துகளின் அளவுள்ள சீன உளவு பலூன் ஒன்று அமெரிக்க வான்வெளியில் பறப்பதாகவும், இந்த உளவு பலூனானது அமெரிக்காவின் அணு ஆயுத தளங்களை கண்காணிப்பதற்காக சீனாவால் அனுப்பப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியது.
இதன்காரணமாக சீனாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்த தனது பயணத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ரத்து செய்தார்.
மேலும் பொறுப்பற்ற முறையில் சீனா தனது உளவு பலூனை அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது என்று சீனாவிற்கு கண்டனம் தெரிவித்தார்.
ஆனால் சீனா, அமெரிக்காவின் குற்றச்சாட்டை மறுத்தது. அமெரிக்கா மீது பறக்கும் பலூனானது வானிலை மற்றும் பிற அறிவியல் நோக்கங்களுக்காக விண்ணில் செலுத்தப்பட்டது.
அது அமெரிக்க வான்வெளியில் வழி தவறி சென்றதற்கு வருத்தம் தெரிவிக்கிறோம் என்று சீன அரசு நேற்று தெரிவித்திருந்தது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், “சீன உளவு பலுனை நாங்கள் கண்காணித்து வருகிறோம்.
மேலும் இந்த பலுனானது அமெரிக்காவில் உள்ள மக்களுக்கும் ராணுவத்திற்கும் இதுவரை எந்த விதமான அச்சுறுத்தலையும் கொடுக்கவில்லை. சீன உளவு பலூன் விவகாரத்தில் சரியான நேரத்தில் நடவடிக்கை எடுப்போம்.” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று அதிகாலை அமெரிக்க இராணுவ போர் விமானம் தென் கரோலினா கடற்கரை பகுதியில் வைத்து சந்தேகத்திற்குரிய சீன உளவு பலூனை சுட்டு வீழ்த்தியது.
இதனை தொடர்ந்து சீன உளவுப் பலூனை சுட்டு வீழ்த்திய போர் விமானிகளுக்கு அதிபர் ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார்.
செல்வம்