அருணாசலப் பிரதேசத்தின் 11 இடங்களுக்கு புதிய பெயரை வெளியிட்ட சீனா!

Published On:

| By christopher

அருணாச்சலப் பிரதேசம் குறித்து சீனா முந்தைய காலங்களில் தொடர்ச்சியாக உரிமை கோருவதும்,  ஒவ்வொரு முறையும் இந்தியா அதை கடுமையாக மறுத்தும் வருகிற நிலையில், அருணாசலப் பிரதேச விஷயத்தில் இந்தியாவை மீண்டும் சீண்டும் வகையில், அம்மாநிலத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை ‘திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்’ என்று பெயரிட்டு புதிய வரைபடம் ஒன்றை வெளியிட்டுள்ளது சீனா.

அருணாசலப் பிரதேசத்தில் இந்தியா ஜி20 மாநாட்டின் கூட்டத்தில் கலந்து கொள்ளாத சீனா, கூட்டம் நடத்தப்பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு  இவ்வாறு வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

பெயரிடப்பட்ட 11 இடங்களில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள், இரண்டு நிலப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் ஆகியவை அடங்கும்.

சீனாவினால் உரிமை கோரப்படும் இந்தப் பகுதி எப்போதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாகும்.

ஆனால், சீனா இந்த இடங்களுக்கு சீனப் பெயர்களைச் சூட்டுவதன் மூலம் அவற்றைத் தங்களுடையதாக உரிமை கொண்டாட நினைக்கிறது.

 சீன, திபெத்திய மற்றும் பின்யின் ஆகிய மொழிகளில் சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை இந்தப் பெயர்களை வெளியிட்டுள்ளது.

இது மாநில கவுன்சில் வழங்கிய புவியியல் பெயர்கள் குறித்த விதிமுறைகளுக்கு இணங்க, சீனாவின் அமைச்சரவை இதை வெளியிட்டதாக குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, “அத்தகைய அறிக்கைகளை நாங்கள் பார்த்தோம். சீனா இத்தகைய நடவடிக்கையை மேற்கொள்வது இது முதல் முறை அல்ல.

புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை வழங்குவது களத்தில் உள்ள நிலைமையை மாற்றாது. அருணாசலப் பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. இப்போதும் அது தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பாக 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், துணை குடியரசுத்  தலைவர் வெங்கையா நாயுடுவின் வருகைக்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும்,  எல்லைப் பிரச்சினையை அதிகரிக்கும் எந்த ஒரு செயலையும் இந்தியா செய்யக் கூடாது என்று தெரிவித்தது.

சீனாவின் இந்த எதிர்ப்புக்கு, இந்தியத் தலைவர்கள் அருணாசலப் பிரதேசத்துக்கு வருகை தந்ததற்கு ஆட்சேபனை தெரிவிக்க எந்த அடிப்படையும் இல்லை என்று இந்தியா பதிலடி அளித்தது.

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்,  பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அருணாசலப் பிரதேசத்துக்கு 2019ஆம் ஆண்டு வருகை தந்ததற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. 2020ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா அருணாச்சலப் பிரதேசத்துக்குச் செல்வதற்கும் சீனா எதிர்ப்பு தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

ராஜ்

IPL தொடரில் இருந்து வெளியேறிய பெங்களூரு அணி வீரர்!

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எடப்பாடி, அண்ணாமலை கூட்டணித் தூண்டில்!

China renames 11 places
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel