சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: இந்தியாவில்?

இந்தியா

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகள், மருத்துவர்கள் மற்றும் மருந்துகளின் இருப்புகளை சீன அரசு அதிகப்படுத்தி வருகிறது.

சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதன்முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த கொரோனா வைரசானது உலகம் முழுவதும் பரவியது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலக நாடுகளை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ், தற்போது குறைய துவங்கியுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் தற்போது கொரோனா தொற்று வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவில் இந்த ஆண்டின் நவம்பர் மாதத்தின் தொடக்கம் முதல் கொரோனா தொற்று பரவியதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் பதவி விலக வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர். மக்களின் தொடர் போராட்டத்தால், கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதனால் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

கடந்த டிசம்பர் 4-ஆம் தேதிக்கு பிறகு சீனாவில் கொரோனா தொற்றுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்று சீன அரசு தெரிவித்திருந்த நிலையில் நேற்று இரண்டு கொரோனா இறப்புகளை சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் பதிவு செய்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 2,097 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவ ஊழியர்களும் கொரோனா தொற்றிற்கு உள்ளாவதால், சீனா முழுவதும் மருத்துவ பணியாளர்கள் பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனால் ஜெஜியாங், சோங்கிங் மற்றும் அன்ஹூய் நகரங்களில் லேசான அல்லது அறிகுறியற்ற கொரோனா தொற்று ஏற்பட்டால் மக்கள் வேலைக்கு திரும்பலாம் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் உள்ள பல பெரிய மருத்துவமனைகள் அதிக வெண்டிலேட்டர் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு உபகரணங்களை அவசரமாக வாங்கி வருகின்றன. தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மருத்துவ ஊழியர்கள் தங்களது வேலை நேரத்தை விட அதிகமாக மருத்துவமனைகளில் வேலை செய்கின்றனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் மருத்துவ ஊழியர்கள் தொடர்ந்து வேலை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவில் சமூக ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டவை மற்றும் கடுமையான தணிக்கைக்கு உட்பட்டவை. ஆனால் தற்போது மக்கள் பலரும் கொரோனா இறப்புகள் குறித்து அதிகளவில் விவாதித்து வருகின்றனர்.

தளர்வுக்கு பிறகு குறைவான எண்ணிக்கையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதால் தொற்று விகிதங்கள் குறைந்துள்ளதாகவும், உண்மையான விவரங்களை வெளியட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த டிசம்பர் 18-ஆம் தேதி பெய்ஜிங்கில் உள்ள ஒரு தகன அறையில் கொரோனாவில் இறந்தவர்களின் உடல்கள் அதிக அளவில் வைக்கப்பட்டதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த இறப்புகள் கொரோனா தொற்று பாதிப்பினால் ஏற்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

புத்தாண்டிற்கு பிறகு சீனாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் வேகமெடுக்கும் என்றும் அப்போது 15 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழக்ககூடும் என்றும் சீனாவில் உள்ள மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவின் வளர்ச்சிக்கான முன்னறிவிப்பை ஜூன் மாதத்தில் கணக்கிடப்பட்ட 4.3 சதவிகிதத்திலிருந்து 2.7 சதவிகிதமாகஉலக வங்கி குறைத்துள்ளது.

சீனாவில் தடுப்பூசி சதவிகிதம் 90 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. எனினும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெற்ற பெரியவர்கள் 57.9 சதவிகிதமாகவும், 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் 42.3 சதவிகிதம் உள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியை சீன அரசு அதிகப்படுத்தி வருகிறது.

கடந்த நவம்பர் 2-ஆம் தேதி முதல் ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக வேர்லோடோ அமைப்பு தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 112 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மூன்று பேர் உயிரிழந்தனர். 3,490 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சமூக வலைதளங்களில் இதுகுறித்து பலரும் பேசி வருகின்றனர். கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க இந்திய அரசு தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

செல்வம்

“ஆறுமுகசாமி சொன்ன காரணத்துக்காக மட்டும் ஆப்ரேஷன் செய்ய முடியாது” – மூத்த மருத்துவர் பதில்!

ரபேல் வாட்ச் ரசீது அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி மீண்டும் கெடு!

+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *