அமைதி பேச்சுவார்த்தை: சீனாவுக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்!

Published On:

| By Selvam

உக்ரைன் – ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஓர் ஆண்டை கடந்தும் நீண்டு வரும் உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த சூழலும் தென்படவில்லை. இதனிடையே ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி திட்டத்தை சமீபத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில் மூன்று நாட்கள் பயணமாக கடந்த 20ஆம் தேதி ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜின்பிங், மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் புதினுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார். உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சீனா அமைதி திட்டம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.

அதன் பிறகு இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது புதின், “சீன அமைதி திட்டத்தின் பல விதிகள் உக்ரைனில் மோதலை தீர்ப்பதற்கான அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்படலாம். உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகள் சமாதானத்துக்கு தயாராக இருக்கும்பட்சத்தில் சீனாவின் அமைதி திட்டம் போரை முடிவுக்கு கொண்டு வரலாம். ஆனால் உக்ரைன் மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அந்த தயார் நிலையை ரஷ்யா இதுவரை பார்க்கவில்லை” என கூறினார்.

China Hopes Russia and Ukraine to hold peace talks

இந்த நிலையில் உக்ரைன் – ரஷ்யா போரில் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தைக்காக சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள ஜெலன்ஸ்கி, “போர் நிறுத்தத்தை ஏற்படுத்த சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சீனாவிடமிருந்து இதுவரை பதில் வரவில்லை. நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம். உரையாடலுக்கு அழைப்பு விடுக்கிறோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: மில்க் கேசரி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share