சீனாவில் பரவி வரும் BF 7 வைரஸ் குறித்து இந்தியர்கள் கவலைப்பட தேவையில்லை என்று டாக்டர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரொனா வைரஸ் அதிகளவில் பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளன.
நோய்த்தொற்றின் புதிய மாறுபாடுகளைக் கண்காணிக்க அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் நேற்று (டிசம்பர் 21) கடிதம் எழுதியுள்ளார்.
இந்தநிலையில், சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா தொற்று குறித்து டாக்டர் ராஜ்குமார் கூறும்போது,
“சீனாவில் தற்போது கொரோனா தொற்று காட்டுத் தீ போல பரவி வருகிறது. அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. BA 5 ஒமைக்ரான் வைரஸிலிருந்து உருமாறிய BF 7 வைரஸ் தற்போது சீனாவில் அதிகமாக பரவி வருகிறது.
சீனா இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பின்பற்றி வந்த ஜீரோ கோவிட் கொள்கையை மக்களின் போராட்டத்தால் சமீபத்தில் தவிர்த்தது.
இதனால் இந்த புதிய வகை வைரஸ் மக்களை எளிதாக தாக்குகிறது. முதலில் இந்த வைரசானது ஹாங்காங்கில் அதிகளவில் பரவியது.
BF 7 வைரசானது தனித்துவமான சில தகவமைப்புகளைக் கொண்டுள்ளது. அதன்படி, இந்த வைரசானது எளிதில் பரவக்கூடியது மற்றும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்துகளுக்கு பலனளிக்காது. இதனை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலான காரியம்.
சீனாவில் உள்ள 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டாலும், 60 வயதானவர்களுக்கு 40 சதவிகிதம் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவர்கள் தான் தற்போது கொரோனா வைரசிற்கு மிக கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறைவான செயல்திறன் கொண்ட சினோபார்ம், சினோவாக் போன்ற தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால் அவற்றின் செயல்திறன் 3 முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே கொரோனாவிற்கு எதிராக பலனளிக்கும்.
இதனால் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த கொரோனா தொற்றிற்கு அதிகளவில் பலியாகி உள்ளனர்.
2023-ஆம் ஆண்டு கோடை காலங்களில் இந்த கொரோனா வைரஸ் தொற்று குறைய வாய்ப்புள்ளது.
சீனா ஒரு முக்கியமான உற்பத்தி மையமாக இருப்பதால், எலாக்ட்ரானிக்ஸ், நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் சிக்கல் ஏற்படும். சீனா பொருளாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது.
இந்த BF 7 வைரசானது கோடிக்கணக்கான மக்களுக்கு பரவுவது மூலமாக விரைவில் புதிய உருமாற்றமாக மாற வாய்ப்புள்ளது. இது உலகின் பிற பகுதிகளில் பரவக்கூடும்.
இந்தியர்கள் BF 7 வைரஸ் குறித்து கவலைப்பட தேவையில்லை. இந்த வைரசானது கடந்த 4-5 மாதங்களில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதால், XBB, BQ1, BA.2 போன்ற வைரஸ்களின் திறனை மட்டுப்படுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் BF 7 வைரசின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
மீண்டும் ஆம்புலன்சிற்கு வழிவிட்ட முதல்வர் கான்வாய்!
பதான் சர்ச்சை: சாதனை படைத்த ஷாருக்கான்