கொரோனா பரிசோதனையின் போது தங்கள் நாட்டுப் பயணிகளை மட்டும் குறிவைப்பதாகச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகளை அச்சுறுத்திய கொரோனா பரவல் இந்த ஆண்டு குறைந்திருந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினர்.
ஆனால் கடந்த சில தினங்களாகச் சீனாவில் ஒமிக்ரான் பிஎஃப்-7 வகை கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றுக்குச் சீனாவில் நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவித்திருந்தன.
சீனா மட்டுமல்லாது அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவ தொடங்கியது. இந்த ஒமிக்ரான் பிஎஃப்-7 வகை தொற்று இந்தியாவிலும் கண்டறியப்பட்டது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பன்னாட்டு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்தியது.
தொற்று பாதிப்பு மற்றும் அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாகச் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என அமெரிக்கா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கொரோனா பரிசோதனையில் தங்கள் நாட்டு மக்கள் மட்டும் குறிவைக்கப்படுவதாகச் சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்துப் பேசிய சீனா வெளியுறவுத் துறை அமைச்சர் நொவோ நிங், “சில நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளை மட்டும் குறிவைத்து கொரோனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இது அறிவியல் ஆதாரமற்றவை மற்றும் இந்த நடவடிக்கைகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் சீனா எதிர் நடவடிக்கைகளை எடுக்க முடியும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மோனிஷா
ஜாம்பவான் மரணத்திலும் செல்ஃபி : வசைபாடும் நெட்டிசன்கள்!
ஏசி பெட்டிக்குள் 60 லட்சம், 200 ஏக்கர்: மாஜி அமைச்சர் சம்பத் தலைமறைவு?