கடத்தியவரை கட்டிப்பிடித்து அழுத குழந்தை… தாயுடன் செல்ல மறுத்த ஆச்சரியம்!

இந்தியா

தன்னைக் கடத்தியவரைப் பிரிய மனமின்றிக் குழந்தை ஒன்று கதறி அழுத சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரைச் சேர்ந்தவர் தனுஜ் சாஹர். தலைமைக் காவலராகப் பணியாற்றிய இவர் ஒழுங்கீனம் காரணமாக  காவல்துறையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வசிக்கும் தனது உறவினரின் 11 மாத ஆண் குழந்தையான பிரித்வியை கடத்தி கொண்டு சென்றுவிட்டார். தலைமறைவான தனுஜ் சாஹரைக் காவல்துறையினர் வலைவீசித் தேடினர். தனுஜ் பற்றி தகவல் கொடுத்தால் 25 ஆயிரம் பரிசு கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தனது தோற்றத்தை மாற்றி நீளமான தாடி, தலைமுடியை வளர்த்துக் கொண்ட இவர், உத்தரப் பிரதேசத்தின் மதுரா மாவட்டத்தில் யமுனை நதிக்கரையில் குடிசை அமைத்து, துறவிபோல் வேடமிட்டு வாழ்ந்து வந்துள்ளார். மொபைல் போனையும் பயன்படுத்துவதில்லை. இதனால் அவரை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

கடத்திச் சென்ற குழந்தையைத் தனது மகன் என்று கூறி பாசத்துடன் வளர்த்ததாக தெரிகிறது. இந்த நிலையில், யமுனை நதிக்கரையில் தனுஜ் வசிப்பதாக தகவல் கிடைக்கவே காவல்துறையின் சிறப்புப் படையினர் அங்கு சென்றனர். துறவி போலவே போலீசாரும் அங்கு தங்கி தனுஜை கண்காணித்து வந்தனர். தாடி வளர்த்து இருப்பது தனுஜ்தான் என்பதை உறுதி செய்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.

பின்னர், குழந்தையின் பெற்றோர் ஜெய்ப்பூர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அப்போது அந்தக் குழந்தை, தன்னை கடத்திச் சென்ற தனுஜ் சாஹரை விட்டுப் பிரிய மனமில்லாமல் கதறி அழுதது. தனுஜ் சாஹரும் குழந்தையைக் கட்டிப்பிடித்து அழத் தொடங்கினார். அவரிடம் இருந்து குழந்தையை வலுக்கட்டாயமாகப் பிரித்து  பெற்றோரிடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். தனுஜ் சாஹரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

உண்மையான பெற்றோருக்கு நடுவே கைது செய்யப்பட்ட முன்னாள் போலீசுக்கும், குழந்தைக்கும் இடையே  நடந்த பாசப்போராட்டம்தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டார் ஸ்டாலின்

ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களை பார்வையிட்டார் ஸ்டாலின்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *