கேரள மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளன்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, எந்த நடவடிக்கையும் இன்றி அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று (ஆகஸ்ட் 8) கேரள சட்டசபை மீண்டும் கூடியது. இதில் மத்திய பாஜக அரசின் பொது சிவில் சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீர்மானம் கொண்டு வந்தது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் பொது சிவில் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை விதி எண் 118இன் கீழ் தாக்கல் செய்தார். பொது சிவில் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது என இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டது.
கேரள அரசு கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் ஆதரவும் தெரிவித்தார். அதேசமயம், இந்த தீர்மான வரைவின் இறுதி பகுதியை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதை ஏற்று, தீர்மான வரைவில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், அரசியல் சாசனம் மற்றும் அனைத்து அதிகாரபூர்வ பதிவுகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மறுபெயரிட மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானத்தை முதல்வர் பினராயி விஜயன் இன்று (ஆகஸ்ட் 9) தாக்கல் செய்கிறார்.
மாநில பெயர் மாற்ற தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று இன்றே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“மணிப்பூர் பற்றி பாஜகவிற்கு கவலையில்லை” – காங்கிரஸ்
அடியே டிரைலர்: ஜிவி பிரகாஷின் அரசியல் பகடி!