உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா நேற்று ( ஆகஸ்ட் 26 ) பணி ஓய்வு பெற்றார். அப்போது அவர் வழக்குகளை பட்டியலிடுவதில் கவனம் செலுத்தாததற்கு மன்னிக்க வேண்டும் என்று கூறினார்.
உச்ச நீதிமன்றத்தின் 48ஆவது தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா 2021 ஏப்ரல் 24ஆம்தேதி பதவி ஏற்றார். 16 மாதங்கள் அவர் நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதனை முன்னிட்டு, டெல்லி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பிரியாவிடை நிகழ்ச்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “வழக்குகள் நிலுவையில் இருப்பது ஒரு பெரிய சவாலாக உள்ளது என்ற உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
வழக்குகளை பட்டியலிடுவது மற்றும் சுட்டிக்காட்டுவது ஆகியவை என்னால் அதிகம் கவனம் செலுத்த முடியாத பகுதிகளில் ஒன்று என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன்.

வழக்குகளை பட்டியலிடுவதில் தேவையான கவனம் செலுத்தாததற்கு மன்னிக்க வேண்டும். நாங்கள் எல்லா நாட்களிலும் பரபரப்பான சூழலில் பணியில் மும்முரமாக இருக்கிறோம்” என்றார்.
நீதித்துறையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. வழக்கறிஞர்கள் சங்கம் தனது முழு மனதுடன் ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இல்லாவிட்டால், தேவையான மாற்றங்களைக் கொண்டுவருவது கடினமாக இருக்கும் என்றும் தெரிவித்தார் என்.வி.ரமணா.
நீதிமன்றம் நிலைத்து நிற்கும்
நீதிமன்றங்களின் நம்பகத்தன்மை பாதுகாக்கப்படாவிட்டால், இந்த நீதிமன்றத்தின் அதிகாரியாக இருந்து கொண்டு நாம், மக்களிடமும் சமூகத்திடமும் மரியாதை செலுத்த முடியாது. இந்திய நீதித்துறை வளர்ந்து வருகிறது, அதை ஒரே ஒரு உத்தரவு அல்லது தீர்ப்பால் வரையறுக்கவோ அல்லது தீர்மானிக்கவோ முடியாது.
சாமானிய மக்களுக்கு விரைவான மற்றும் நியாயமான நீதியை வழங்கும் செயல்பாட்டில் நாம் அனைவரும் முன்னேறுவோம்.
நீதித்துறையில் நுழைந்த இளையவர்கள் மூத்தவர்களை முன்மாதிரியாகக் கருதுகிறார்கள். ஆகவே மூத்தவர்கள் அனைவரும் அவர்களை சரியான பாதையில் செல்ல வழிகாட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
பலர் இங்கு வரலாம் ,போகலாம் ஆனால் நீதிமன்றம் என்றென்றும் நிலைத்து நிற்கும் . இந்த நேரத்தில் எனது சக ஊழியர்கள் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்