சத்தீஸ்கர் மாநிலத்தில் மதம் மாற வலியுறுத்தி கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளனர்.
கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் நாராயண்பூர் மற்றும் கோண்டகான் பகுதிகளில் அவர்களை கட்டாயமாக இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்ய வலியுறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதனை தொடர்ந்து சமூகம் மற்றும் மதச்சார்பின்மை ஆய்வு மையத்தின் இயக்குனர் இர்ஃபான் தலைமையிலான உண்மை கண்டறியும் ஆய்வு குழு அந்த பகுதியில் சென்று விசாரணை நடத்தியது.
அவர்களது விசாரணையில், “கடந்த மாதம் சுமார் 1000 கிறிஸ்துவ பழங்குடியினரை வலுக்கட்டாயமாக இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்ய வலியுறுத்தி வலதுசாரி அமைப்புகள் தாக்கியுள்ளனர்.
நாராயண்பூர் பகுதியில் 18 கிராமங்களிலும், கோண்டகான் பகுதியில் 15 கிராமங்களிலும் தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இதில், சுமார் 1,000 கிறிஸ்தவ ஆதிவாசிகள் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தங்களது குழு நடத்திய விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்ய உள்ளோம்.” என்று தெரிவித்தனர்.

இந்தநிலையில், சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் உள்ள கோர்ரா கிராமத்தில் நேற்று கிறிஸ்தவ குடும்பங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காவல்துறை அதிகாரி உட்பட பலர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் சிலர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், “கிட்டத்தட்ட 400 முதல் 500 பேர் கொண்ட கும்பல் கோர்ரா கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். எங்களை கட்டைகளால் தாக்கினர். நாங்கள் அந்நிய மதத்தைப் பின்பற்றுவதாகக் குற்றம் சாட்டிய அவர்கள் எங்களை காடுகளில் தஞ்சமடைய சொன்னார்கள்.” என்றார்கள்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கும் போது, இரு பிரிவினருக்கு இடையேயான மோதலில் 8 பேர் காயமடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
செல்வம்