சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை அமைக்கும் திட்டம் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
பெங்களூருவிலிருந்து சென்னை வரை ரூ. 16,730 கோடி மதிப்பில் 262 கி.மீ. தொலைவுக்கு 8 வழிச்சாலை அமைக்கும் பணிக்குக் கடந்த மே மாதம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
தற்போது சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விரைவுச் சாலையானது கர்நாடகத்திலிருந்து ஆந்திர மாநிலம் வழியாகத் தமிழகத்தை இணைக்கிறது.
பெங்களூரு – சென்னை இடையேயான விரைவுச் சாலைப் பணிகளை மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று (ஜனவரி 5) ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்விற்குப் பிறகு நிதின் கட்கரி, “இந்த பசுமை வழிச் சாலை திட்டத்தால், இரு நகரங்களுக்கு இடையேயான பயணம் மிக விரைவானதாக இருக்கும். மேலும், இந்த சாலை திறக்கப்பட்டால், மிக முக்கிய நகரங்களுக்குள் சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்குவது தவிர்க்கப்படும்” என்று கூறினார்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உடன் கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சர் சி.சி.பட்டீலும் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து ரூ. 4,473 கோடி மதிப்பில் பெங்களூருவிலிருந்து மைசூரு வரை 118 கி.மீ தொலைவுக்கு அமைக்கப்பட்டு வரும் விரைவுச் சாலைப் பணிகளையும் பார்வையிட்டார்.
மோனிஷா
வெளிநாட்டிலிருந்து வந்த 40 பேருக்கு பிஎஃப்-7 தொற்று!
சூர்யா கொடுத்த ‘ஜெய்பீம்’ அப்டேட்!