தமிழக அரசின் கருத்தை கேட்ட பிறகே சென்னை – சேலம் 8 வழிச்சாலைத் திட்டப்பணிகள் தொடங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து இருக்கிறார்.
சேலத்தில் இருந்து சென்னை வருவதற்கான பயண நேரத்தை குறைக்கும் வகையில் 8 வழிச்சாலை (அ) பசுமை வழிச்சாலை என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த கடந்த அதிமுக அரசு மும்முரம் காட்டியது.
இந்த திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் போது விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று குற்றம் சாட்டப்பட்டது. இதனால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தை நாடின. பல இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று திட்டத்தை மேற்கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதைத்தொடர்ந்து 2025க்குள் திட்டம் முழுமை பெறும் என்று மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை மக்களவையில் அறிவித்தது. தமிழக அரசும் வேறு வழியின்றி இத்திட்டத்துக்கு ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

அதன்படி நாடாளுமன்றத்தில் நேற்றைய (ஆகஸ்ட் 4) கேள்வி நேரத்தின்போது பேசிய மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி கொடுத்துள்ளதா? என்று கேட்டார். இந்தத் திட்டத்துக்கான மொத்த செலவு எவ்வளவு? எப்போது பணிகள் தொடங்கி நிறைவு பெறும்? என்று மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்திற்கு அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்துள்ள சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, எந்தெந்த பாதையில் சாலை அமைக்கப்படும் என்பது குறித்து மாநில அரசின் கருத்துக்காக காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் மாநில அரசின் கருத்துகள் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கும் எனத் தெரிவித்துள்ள அவர் பாரத் மாலா திட்டத்தின்கீழ் அமைக்கப்பட உள்ள சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தின் மொத்த மதிப்பு 7,230 கோடி ரூபாய் என பதிலளித்துள்ளார்.
அதேபோல் சேலம் எட்டு வழிச்சாலைக்கான 90 % நிலம் கையகப்படுத்தப்பட்டால் மட்டுமே திட்டபணிகள் தொடங்கும் எனவும், அதே சமயம் மக்கள் முழுமையாக எதிர்த்தால் திட்டம் கைவிடப்படும் என்று மத்திய சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி. கே. சிங் ஏற்கனவே தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
27 பேருக்கு ஆயுள் தண்டனை: கச்சநத்தம் படுகொலை வழக்கில் கோர்ட் அதிரடி!