சென்னை ஐசிஎஃப் நிறுவனம், 25-வது வந்தே பாரத் விரைவு ரயிலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த ரயில் போபாலுக்குச் செல்கிறது.
இந்தியாவின் ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பினால் வடிவாக்கம் செய்யப்பட்டு சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தால் கட்டமைக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக இந்திய ரயில்வேயினால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகிறது.
அனைத்து வந்தே பாரத் ரயில்களும் சென்னை ஐ.சி.எஃப். தொழிற்சாலையிலேயே கட்டமைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளைக் கொண்ட இந்த ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பகுதிகளிலெல்லாம் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், சென்னை ஐசிஎஃப்பில் 25-வது வந்தே பாரத் விரைவு ரயில் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள ஐசிஎஃப் நிறுவன பொது மேலாளர் பி.ஜி.மால்யா, “இந்த அதிநவீன ரயில் பெட்டி அனைத்து இந்தியர்களின் இதயத்தையும் கவர்ந்துள்ளது. உங்களின் தளராத முயற்சியினால் நமது நிறுவனம், 25-வது வந்தே பாரத் ரயில் பெட்டியை உருவாக்கி உள்ளது. இதை தெரிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ரயில் போபாலுக்குச் செல்கிறது. இந்த மைல் கல்லை எட்டியதற்காக ஊழியர்களுக்கு நன்றியும் பாராட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த 25-வது வந்தே பாரத் ரயில் மத்தியப்பிரதேசத்தின் தலைநகரான போபாலுக்கும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மூன்றாவது மிகப் பெரிய நகரமான ஜபல்பூருக்கும் இடையே ஜூன் 27ஆம் தேதி முதல் இயக்கப்படவிருக்கிறது.
ராஜ்
சென்னையில் ‘முதலமைச்சர் கோப்பை’ போட்டி அறிவிப்பு!
கிச்சன் கீர்த்தனா: வீட்டிலேயே க்ரில் உணவுகள்… கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்!