அருணாச்சல பிரதேசத்தில் இன்று (மார்ச் 16) காலை ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த இரண்டு விமானிகளின் உடல்கள் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள மிஸ்ஸமாரியில் இருந்து அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் உள்ள தவாங் நோக்கி இன்று காலை புறப்பட்டது.
ஆனால் பறக்க ஆரம்பித்த சில மணி நேரத்தில் தொடர்பை இழந்தது ஹெலிகாப்டர். இதனையடுத்து நடைபெற்ற தேடுதலில் அருணாச்சல பிரதேசம் காமெங் மாவட்டத்தில் உள்ள பங்களாஜாப் கிராமத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
எனினும் ஹெலிகாப்டரை இயக்கிய இரு பைலட்டுகளின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனையடுத்து இந்திய ராணுவம், எஸ்எஸ்பி மற்றும் ஐடிபிபி ஆகியவற்றின் ஐந்து குழுக்கள் விமானிகளை தேடும் பணியில் தீவிரமான இறங்கின.
இந்நிலையில் விபத்துகுள்ளான சீட்டா ஹெலிகாப்டரில் பயணித்த விமானி லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் துணை விமானி மேஜர் ஜெயந்தின் உடல்கள் சடலமாக பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் மகேந்திர ராவத் கூறுகையில், “மண்டலாவின் கிழக்கே உள்ள பங்களாஜாப் கிராமத்திற்கு அருகில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த விமானி லெப்டினன்ட் கர்னல் விவிபி ரெட்டி மற்றும் துணை விமானி மேஜர் ஜெயந்தின் உடல்கள் அடையாளம் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இருவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.
மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா