அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓபன் ஏஐ கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி சாட் ஜிபிடி என்னும் புதிய சாட்போட் ஒன்றை வெளியிட்டது. இது பயன்பாட்டுக்கு வந்தது முதல் இதனால் எதிர்காலத்தில் மனிதர்களின் வேலைகள் பறிபோகுமா? என்றளவுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரும் அச்சம் எழுந்துள்ளது.
ஏனெனில் நீங்கள் கவிதை முதல் சாப்ட்வேர் வரை எது குறித்து கேட்டாலும் ஒரு தேர்ந்த பேராசிரியர் போல இது தகவல்களை வாரி வழங்கும். நாம் கேட்கும் கேள்விகளுக்கு ஒற்றை வரிகளில் பதில் அளிக்கும் வேலை இங்கு கிடையாது. அதுகுறித்த நீண்ட உரையாடலுடன் உங்களுக்கு தேவையான விவரங்களை சாட் ஜிபிடி உரைநடை வடிவில் வழங்கும். சுருக்கமாக உங்கள் வேலை சுமையை குறைத்து தேவையான தகவல்களை மட்டும் அளிக்கும் ஒரு கருவி என இதை சொல்லலாம். இதனால் உலகளவில் இதை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சாட் ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் தொடங்கி பல்வேறு நிறுவனங்கள் புதிய சாட்போட்களை வெளியிட்டன. என்றாலும் அது சாட்ஜிபிடி அளவுக்கு இல்லை. போகின்ற வேகத்தை பார்த்தால் கூகுளையும் ஓரங்கட்டி விடக்கூடிய அளவுக்கு இந்த சாட் ஜிபிடி செயற்கை நுண்ணறிவின் ஆல் இன் ஆல் அழகுராஜாவாக திகழ்கிறது. இதனால் உலகம் முழுக்க தினசரி இந்த சாட்ஜிபிடியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்த நிலையில் ஓபன் ஏஐ நிறுவனம் வெளிப்படை தன்மை இல்லை என்று கூறி அதன் சிஈஓ சாம் ஆல்ட்மேனை நேற்று (நவம்பர் 17) பதவி நீக்கம் செய்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம், ”சாம் ஆல்ட்மேன் குறித்து இயக்குனர்கள் குழுவில் நாங்கள் ஆலோசனை செய்தோம். அதில் சாம் இயக்குனர்கள் குழுவில் நிலையான தகவல் தொடர்பில் இல்லை என்று தெரிய வந்தது. அதனால் அவரை சி.ஈ.ஓ பொறுப்பில் இருந்து நீக்கம் செய்கிறோம்” என அறிக்கை வெளியிட்டுள்ளது.
சாம் ஆல்ட்மேன் பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரேக் பிராக்மேனும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதற்கிடையே சாம் ஆல்ட்மேனை பதவி நீக்கம் செய்த உடனேயே தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பணியாற்றி வந்த மீரா முராட்டியை இடைக்கால சி.ஈ.ஓ-வாக ஏஐ நிறுவனம் நியமித்துள்ளது. அடுத்தடுத்து இணை நிறுவனர், சி.ஈ.ஓ இருவரும் ஓபன்ஏஐ நிறுவனத்தில் இருந்து வெளியேறி இருப்பது தகவல் தொழில்நுட்ப வட்டாரங்களில் மிகப்பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-மஞ்சுளா
”அன்று ஆதரவு கூறியிருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது”: எடப்பாடி
நொண்டி சாக்கு சொல்லி எடப்பாடி வெளிநடப்பு : தங்கம் தென்னரசு தாக்கு!