முடி சூட்டிக்கொண்ட மூன்றாம் சார்லஸ்

Published On:

| By Kavi

பிரிட்டன் மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று (மே 6) முடி சூட்டிக்கொண்டார்.

இங்கிலாந்தை 70 ஆண்டுக்காலம் ஆட்சி செய்து வந்த ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும் இளவரசருமான மூன்றாம் சார்லஸ் அடுத்த மன்னராக அறிவிக்கப்பட்டார்.

எனினும் முடிசூட்டு விழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் மே 6ஆம் தேதி முடிசூட்டுவிழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்தது. இவ்விழாவில் இந்தியாவில் இருந்து கலந்துகொள்ள துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தங்கார் மற்றும் அவரது மனைவி அழைக்கப்பட்டிருந்தனர்.

1953 ஆம் ஆண்டு ராணி எலிசபெத் முடிசூட்டிக்கொண்ட பிறகு, 70 ஆண்டுகளுக்கு பின் நடைபெறும் விழா என்பதால் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11 மணிக்கு முடிசூட்டுவிழா தொடங்கியது. இதனை முன்னிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே வரை மன்னர் சார்லஸும், அவரது மனைவியும் ராணியுமான கமிலாவும் 6 குதிரைகள் பூட்டப்பட்ட சாரட் வண்டியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

மூன்றாம் சார்லஸ் வந்தடைந்ததும் முடிசூட்டு விழா தொடங்கியது. ராணுவ இசை வாத்தியங்கள் முழங்க இருவரும் உள்ளே அழைத்து வரப்பட்டனர். 700 ஆண்டுகள் பழமையான சிம்மாசனத்தின் பின் நின்று பேராயர் ஜஸ்டின் வெல்பி மன்னர் மூன்றாம் சார்லஸை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டார். அப்போது அனைவரும், கடவுளே அரசனைக் காப்பாற்று’ என்று முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து இவ்விழாவில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் பைபிள் வாசித்தார். பிரிட்டன் மன்னருக்கான அரியணை திறக்கப்பட்டு, தங்க அங்கி அணிந்திருந்த மூன்றாம் சார்லஸ் அதில் அமரவைக்கப்பட்டார். இங்கிலாந்து சட்டத்தையும், தேவாலத்தையும் காப்பதாக அவர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

பிரத்யேக எண்ணெய் அவரது தலையில் விடப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து செங்கோலும் வழங்கப்பட்டது. அரியணையில் அமர்ந்திருந்த பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தலையில் எட்வர்ட் கிரீடத்தை பேராயர் சூட்டினார். அதுபோன்று ராணி கமிலாவுக்கும் கிரீடம் சூட்டப்பட்டது. மூடிசூட்டுவிழாவை முன்னிட்டு லண்டனே விழா கோலம் பூண்டுள்ளது.
பிரியா

மதுரை சிறுவனின் ஆசையை சேப்பாக்கில் நிறைவேற்றிய ரோகித் சர்மா

பல்வீர்சிங் கைது : தாமதம் ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share