நம் நாட்டின் சுதந்திர தினத்தின் 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தை ஒட்டி சமூக தளங்களில் இயங்கும் இந்தியர்கள் தங்கள் ப்ரொஃபைல் பிக்சரை மாற்றிட வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு அன்று மனதின் குரல் (மன்கி பாத்) நிகழ்வின் வழியாக நாட்டு மக்களிடம் பேசி வருகிறார் பிரதமர் மோடி. அந்த வகையில் இன்று (ஜூலை 31) பேசினார் பிரதமர்.

அப்போது அவர், “சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா என்பது ஒரு மக்கள் பேரியக்கமாக வடிவெடுத்திருப்பதைப் பார்க்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. அனைத்துத் துறைகள், சமூகத்தின் அனைத்து மட்டங்களைச் சேர்ந்த மக்கள் இதோடு தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
சுதந்திரத்தின் அமுதப்பெருவிழாவின்படி, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, இல்லந்தோறும் மூவண்ணக்கொடி என்ற ஒரு சிறப்பு இயக்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தில் பங்கெடுத்துக் கொண்டு, ஆகஸ்ட் மாதம் 13 முதல் 15 வரை, நீங்களும் உங்கள் இல்லங்களில் மூவண்ணக் கொடியைப் பறக்க விடுங்கள், அல்லது அதை உங்கள் வீட்டில் ஏற்றுங்கள். மூவண்ணக் கொடி நம்மை இணைக்கிறது, நாம் தேசத்தின் பொருட்டு பங்களிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை அளிக்கிறது” என்று கூறிய பிரதமர் மேலும்,
“உங்களிடத்திலே எனக்கு மேலும் ஒரு ஆலோசனையும் உண்டு; அதாவது ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வரை, நீங்கள் அனைவரும் உங்களுடைய சமூக ஊடக சுயவிவரப் புகைப்படங்களில், மூவண்ணத்தைப் பதிவிடலாம். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதிக்கு, நமது மூவண்ணக் கொடியோடு ஒரு தொடர்பு இருக்கிறது. இந்த நாளன்று தான் பிங்கலீ வெங்கையா அவர்கள் பிறந்தார், இவர் தான் நமது தேசியக் கொடியை வடிவமைத்தார். நான் அவருக்கு என்னுடைய மரியாதை கலந்த நினைவாஞ்சலிகளை அர்ப்பணம் செய்கிறேன். நமது தேசியக் கொடி பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் வேளையில், மகத்தான புரட்சியாளர் மேடம் காமாவையும் கூட நாம் நினைவுகூருவோம். மூவண்ணக் கொடிக்கு வடிவம் கொடுப்பதில் அவருடைய பங்களிப்பு மிகவும் மகத்துவம் வாய்ந்தது” என்று குறிப்பிட்டுள்ளார் மோடி.
–வேந்தன்