சிவ சக்தியும் சித்த மரபும்!
ஸ்ரீராம் சர்மா
நிலா!
அண்ணாந்து படுத்து அக்கடாவென களித்துறங்கிய ஆதி மனிதருக்கெல்லாம் கொள்ளை அழகுடையவளாக நின்றிருந்தவள் நிலா!
சங்க காலம் தொட்ட மந்தகாச காதலர்களுக்கெல்லாம் ‘கொக்கரக்கோ’ பாடிய மங்கலத் தோழியானவள் நிலா!
பாரசீகத்து கவி உமர்கய்யாம் – கிரேக்கத்து கவி ஹோமர் – ரோம நாட்டு கவி வெர்ஜில் உள்ளிட்ட பற்பல்லோருக்கும் பாடுபொருளாகி உத்திரத்தில் நின்றொளிர்ந்தவள் நிலா!
உலக கவிகளுக்கெல்லாம் உன்னதக் கவியான காவிரித் தென்கரையில் உதித்த கவிச்சக்கரவர்த்தி கம்பரோ நிலாவைத் தன் நன்றிக்கு உவமைப்படுத்தி உருகுகிறார். இராமனின் பெரும் புகழைத் தான் பாடக் காரணம் சடையப்ப வள்ளலின் பெருந்தனமும் பேராதரவும்தான் என்பவர் நிலாவினை – அதன் ஒளியினை இப்படியாகக் கொண்டாடுகிறார்..
வண்ண மாலை கைபரப்பி உலகை வளைத்த இருள் எல்லாம்
உண்ண எண்ணி தண் மதியத்து உதயத்து எழுந்த நிலாக் கற்றை
விண்ணுமண்ணும் திசையனைத்தும் விழுங்கிக் கொண்ட விரிநீர்
பண்ணைவெண்ணை சடையன் தன் புகழ்போல் எங்கும் பரந்து உளதால்…
அதாவது,
சூரியன் உள்ளோடிப் போன அந்த மாலைப் பொழுதில் உலகை இருள் வளைக்க, நானிருக்கிறேன் இங்கே கவலை வேண்டாம் எனும்படியாக நிலாக் கற்றையானது இருளை விழுங்கி வெள்ளொளி உமிழ்ந்தது போல சடையப்ப வள்ளல் என்னுடன் நின்றாரே என்று நெக்குருகி நின்றார்.
உலகப் பெருங்கவிகளின் கற்பனைக்கு ஊற்றாக நின்ற அழகின் அடையாளமாம் நிலாவினை அறிவியலால் சீண்டிவிட முடியுமா எனில், அது ஆகாது.
நிற்க,
இஸ்ரோ கண்ட நிலா குறித்து மட்டும் இப்போது பேசிக் களிப்போம்!
***
1989 முதல் அப்படியிப்படி நிலவில் சென்று இறங்கிய நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சைனா என ஆளாளுக்கு கொண்டாடிக் கொண்டாலும் கூட…
இதுகாறும் எவரொருவரும் கண்டிராத நிலவின் தென் துருவமதில் முதன் முதலில் மெத்தெனத் தாழ இறங்கி அதிமகா சாதனை ஒன்றை செய்து முடித்திருக்கிறது பேரார்ந்த நமது இந்தியா!
அந்த அறிவார்ந்த பயணத்தில் நமது அன்னைத் தமிழ் மண்ணின் பேரறிவு ஆகப் பெரும் பங்களித்து நமக்கெல்லாம் பெருமை சேர்த்திருக்கிறது!
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தன் மண்ணுக்குப் பெருமை சேர்த்த அறிவியலாளர்களை உடனடியாகத் தொடர்பு கொண்டு மனமுவந்து சொன்னார்…
“சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு இஸ்ரோ குழுவிற்கு வாழ்த்துகள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுக்கு இது ஒரு மாபெரும் பாய்ச்சல்.”
தனது தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் நடுவே இந்தியக் கொடியை இடவலமாக அசைத்தபடி கொண்டாடிய பாரதப் பிரதமர் மோடி அவர்கள், நாடு திரும்பியதும் இஸ்ரோ விஞ்ஞானிகளை ஓடோடிச் சந்தித்து ஆரத் தழுவிக் கொண்டாடினார்.
ஒருபடி மேலே சென்று அறிவித்தார்…
“நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய பகுதியை ‘சிவ சக்தி’ என்றழைப்போம். சந்திரயான் – 3 திட்டத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகம் உள்ளதால் சிவ சக்தி என்று சேர்ந்தழைப்பதே சால சிறந்ததாகும்.”
***
பாரதப் பிரதமரின் நல்விழைவு நாடெங்கிலும் வரவேற்கப்பட்டாலும் – வெற்றிகரமாக நிலவில் சென்று இறங்கிய தருணம் ‘சிவ சக்தி’ என மதம் சார்ந்து அவர் அறிவித்தது தகுமா எனப் பலராலும் விமர்சிக்கப்படவே செய்கிறது. அதற்குப் பின்னால் இருக்கும் அரசியல் குறித்து எனக்கு அக்கறையில்லை.
ஆனால், சந்திரப் பயணத்துக்குப் பின்னாலிருக்கும் சித்த மரபோடிய தமிழ்மண் சார்ந்த அறிவியல் குறித்து எனக்கு மாளாத அக்கறையும் வேட்கையும் உண்டு. அதனை என்றும் வலியுறுத்தியபடியே இருப்பது எனது கடமையாகிறது.
சிவம் என்பது ஒரு பொதுச் சொல்லாகும். ‘சிவம்’ எனில் அன்பு. பேரன்பு. ‘சக்தி’ என்பது அதை வெளிப்படுத்தும் வேட்கையாகிறது.
பாரதப் பிரதமரின் ‘சிவ சக்தி’ அறிவிப்பானதொன்றும் புதிதல்ல. அதை முதன் முதலில் மொழிந்தது தென்னகமாகும்.
பல்லாயிரம் ஆண்டுகளாய் தென்னகத்தில் வேரோடி நின்ற சித்த மரபதன் உள்ளோடி நிற்கும் தத்துவமே சிவ சக்தி தத்துவம்!
சிவ சக்தி தத்துவத்தின் அருந்தோற்றமான ஆவுடைலிங்கம் அதற்குள்ளும் ஆயிரம் அறிவியல் இருக்கக் கூடும் !
2018 அக்டோபர் 11இல் OCCULT எனும் அறிவியல் வழி விளக்க முடியாததான – மறைதிறன் தொடர்பான கட்டுரை ஒன்றை ‘ஆவுடை லிங்கம்’ என்னுமொரு தலைப்பில் எழுதி – எழுத்துத் துறையில் எனது தாய்வீடு போலான மின்னம்பலத்துக்கு அனுப்பி வைத்தேன்.
ஆழங்காற்பட்ட சித்த மரபதன் அறைகூவல் லேசுப்பட்டதல்ல எனும் உள்மனக் கூவலோடு எழுதப்பட்டதே அந்தக் கட்டுரை. அந்தக் கட்டுரையை அந்த நாளில் ஏனோ பிரசுரிக்கத் தயங்கியது மின்னம்பலம். ஆசிரியரின் தீர்ப்பை மறுத்துப் பேச முடியாதல்லவா ? பின்பொரு நாளில் 10.7.2021இல் எனதினிய நண்பர் ரங்கராஜ் பாண்டே அவர்களின் சாணக்யாவில் அது பதிந்து வைக்கப்பட்டது.
மீண்டுமொருமுறை துணிந்து சொல்வேன்…
அனாதிகாலம் முதல் அறிவார்ந்த பெருமக்களால் சலிக்க வாழ்ந்து சல்லடையாக்கப்பட்டதே இந்த பூமி! இதைக் கடந்து வேறு ஓர் உலகம் சென்றாக வேண்டும் என்பதைத் தமிழ் சித்த மரபானது ஓயாமல் உரைத்தே வந்திருக்கிறது.
அது ஆகக் கூடிய காரியம்தானா என்பதற்கான ஆரம்பப் பதிலாகவே இன்றைய இஸ்ரோவின் வெற்றியைக் கொள்ள முடிகிறது.
***
சித்து நிலையதை எட்டிப் பிடித்த தமிழ் மண்ணின் தனிப்பெரும் மகாகவியான எட்டயபுரத்து பாரதியார் இப்படி எழுதிச் சொல்கிறார்…
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோலவெறி படைத்தோம்;
உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்;
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ!
இந்தப் பேரண்டமானது எண்ணற்ற கிரகங்களான பலாப்பழச் சுளைகளை ஏற்றிக் கொண்டு சுற்றி வருமோர் பெருவண்டியாம். அதிலோர் வண்டாக மொய்த்தபடித்தான் நான் பாடுகிறேன். இதில் வியக்க என்னவிருக்கிறது என அனாயசமாகக் கேட்கிறார்.
மனமெனும் பறவையினை எந்தத் தயக்கமுமின்றி எட்டு திக்கிலும் சுற்ற விடுவோம். காண்போம் அமரப் பொறி என்கிறார் மகாகவி !
***
பட்டினத்தாரை குருவாகக் கொண்ட தமிழ்மண்ணின் மகா சித்த புருஷராம் பத்ருஹரியார் விக்கித்தபடி பாடி வைத்தார்…
மனதை ஒரு வில்லாக்கி
வான் பொறியை நாணாக்கி
எனது அறிவை அம்பாக்கி
எய்வது இனி எக்காலம்!?
சித்தர் பாடல்களை ஊன்றிக் கவனித்தால் இஸ்ரோ இன்னும் கூட தூர தூரமாய் பாயலாம்!
நிறைந்த வாழ்த்துகள்!
வாழிய சித்த மரபு!
வாழியவே பாரத மணித் திருநாடு!
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ரூ.8,000 ஆக உயர்வு!
கிச்சன் கீர்த்தனா: ஜிஞ்சர் சிக்கன் மசாலா
மோடி குறித்து செய்தி வெளியீடு: பிரபல இணையதளம் மீது சைபர் தாக்குதல்!