லூனா 25 தோல்வி: சந்திரயான் 3 நிலவில் தரையிறங்குவதில் பாதிப்பா?

நிலவில் தரையிறங்குவதற்கான இந்தியாவின் மூன்றாவது சந்திரயான் பயணம் ஜூலை 14-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து எல்விஎம் 3 ராக்கெட்டில் சந்திரயான் 3 வெற்றிகரமாக புறப்பட்டது. அன்றைய தினம் சந்திரயான் 3 விண்வெளியில் ஏவப்படுவதை பார்ப்பதற்காக 10 ஆயிரம் பொதுமக்கள் அங்கே திரண்டிருந்தனர். சந்திரயான் 3 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதும் அங்கிருந்தவர்கள் ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்தனர்.

சந்திரயான் 1, சந்திரயான் 2 திட்டங்கள் தோல்வி அடைந்ததால் சந்திரயான் 3 மீதான எதிர்பார்ப்புகள் உலக அரங்கில் இந்தியாவை உற்று கவனிக்க வைத்தது. சந்திரயான் 3 வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்தபடியான சாதனையை இந்தியா படைக்கும்.

சந்திரயான் கடந்து வந்த பாதை!

சந்திரயான் 1 திட்டம் 2003-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சந்திரயான் பணிகள் நிறைவுபெறுவதற்கு காலதாமதமானதால், 2008-ஆம் ஆண்டு அக்டோபர் 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. திட்டமிட்டபடி நிலவின் சுற்றுவட்டபாதையில் நுழைந்த பிறகு நிலவின் தென் துருவத்தில் விழுந்து நொறுங்கியது. இதனால் சந்திரயான் 1 திட்டம் தோல்வியடைந்தது.

2019-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி சந்திரயான் 2 விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இது 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது. செப்டம்பர் 2-ஆம் தேதி விக்ரம் லேண்டர் 100 கி.மீ தொலைவில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் வரும் போது பிரிக்கப்பட்டது. இந்த விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கி.மீ தொலைவில் தொலைந்து போனது. இதனால் நிலவின் மேற்பரப்பில் இரண்டாவது முறையாக தரையிறங்க முடியாமல் சந்திரயான் 2 திட்டம் தோல்வி அடைந்தது. பல கட்ட முயற்சிகளுக்கு பிறகு சந்திரயான் 2 தகவல் தொடர்பு கருவியான ஆர்பிட்டரை மட்டும் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றிக்கொண்டு வருவதை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

சந்திரயான் 3 திட்டம்!

மூன்றாவது முறையாக நிலவின் தென் துருவ பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியுள்ளது. இந்த சந்திரயான் 3 விண்கலமானது மின்னணு மற்றும் இயந்திர துணை அமைப்புகளை கொண்டுள்ளது.

நேவிகேஷன், சென்சார், உந்துவிசை அமைப்புகள், வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு போன்ற பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. 3896 கிலோ எடை கொண்ட சந்திரயான் 3 நிலவில் தரையிறங்கும் வசதியாக விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளது. இதில் ப்ரோபல்ஷன் மாடியூல் என்ற ஒரு உந்தக்கூடிய ப்ரோபல்ஷன் பகுதி உள்ளது. இது தான் லேண்டர், ரோவரை நிலவில் தரையிறங்க செய்யும்.

ஜூலை 15-ஆம் தேதி முதல் சுற்றுவட்டப்பாதைக்கு சந்திரயான் 3 விண்கலத்தை உயர்த்தும் பணி முடிந்த பிறகு 417622 கி.மீ * 173 கி.மீ வட்டப்பாதையில் பூமியை சுற்ற துவங்கியது.

படிப்படியாக சுற்றுவட்டப்பாதை உயர்த்தபட்டு நிலாவை நோக்கி பயணிக்க துவங்கியது.

ஜூலை 17-ஆம் தேதி இரண்டாவது சுற்றுவட்டப்பாதைக்கு 41603 கி.மீ * 226 கி.மீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டது.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து விலக்கப்பட்டு நிலவை நோக்கி செல்லும் வகையில் அதன் பயண பாதை மாற்றப்பட்டது.

ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையை சந்திரயான் 3 அடைந்தது.

ஆகஸ்ட் 17-ஆம் தேதி விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை உள்ளடக்கிய தரையிறங்கு பகுதி உந்துவிசை அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டது.

நிலவில் தரையிறங்குவதற்கான முக்கிய கட்டத்தை சந்திரயான் 3 அடைந்ததால் அதன் சுற்றுப்பாதை உயரத்தை படிப்படியாக குறைக்கும் பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுனர்.

இதன் விளைவாக நிலவை சுற்றி விக்ரம் லேண்டர் 25 கி.மீ * 134 கி.மீ நீள்வட்டப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கிறது.

சந்திரயான் 3 விண்கலத்திலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் நிலவை நோக்கிய பயணத்தில் சந்திரயான் 2 ஆர்பிட்டரோடு இன்று தொடர்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆகஸ்ட் 23-ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டரை சாப்ட் லேண்டிங் முறையில் தரையிறக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

சந்திரயான் 3 லேண்டர் நிலவில் தரையிறக்கம்!

சந்திரயான் 2 திட்டத்தின் போது தரையிறங்கி கலத்தை நிலவின் தரை பரப்பில் இறக்கியபோது தரையிறங்கி கலம் மெதுவாக இறங்காமல் கீழே விழுந்து நொறுங்கியது. இந்தமுறை தரையிறங்கி கலத்தின் கீழே நான்கு குட்டி ராக்கெட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த ராக்கெட்டுகளை எரித்து தரையிறங்கி கலம் மெதுவாக தரையிறங்கும்.

லேண்டர் பகுதி அதிலிருந்து பிரிந்து நிலவின் மேற்பரப்பில் இறங்கும். அது பாதுகாப்பாக இறங்கிய பின் ரோவர் வெளியேறுவதற்கான சாய்வான அமைப்பு மெதுவாக வெளியேறும். அதன் பின் ரோவர் வெளியே வரும். இந்த ரோவர் நிலவின் மேற்பரப்பை சுற்றி அதனை ஆராய்ச்சி செய்யும். இதில் கிடைக்கும் தகவல்கள் ரோவரிலிருந்து லேண்டருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த தரவுகள் நிலவிலிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருக்கும் சந்திரயான் 2 ஆர்பிட்டருக்கு அனுப்பப்படும். அங்கிருந்து தரையிலுள்ள இஸ்ரோவுக்கு தரவுகள் வந்தடையும்.

லூனா 25 தோல்வி சந்திரயான் 3 பாதிப்பை ஏற்படுத்துமா?

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்த லூனா 25 விண்கலத்தின் மூலம் நிலவின் தென் துருவ பகுதியில் ஒரு வருடம் ஆய்வு செய்வதை ரஷ்யா நோக்கமாக கொண்டிருந்தது.

லூனா விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்ததும் அதன் சுற்றுவட்டப்பாதையை குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதி கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்த நிலையில், லூனா 25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியதாக ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் ரோஸ்காஸ்மோஸ் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “லுனா விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப்பாதைக்கு தயாராகும் போது ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால் விண்கலத்தை கட்டுப்படுத்த முடியாததால் நிலவின் மேற்பரப்பில் மோதி நொறுங்கியது. திட்டமிட்டபடி நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்க முடியவில்லை” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறும்போது, “லூனா விண்கலம் தோல்வி விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதில் தாக்கத்தை ஏற்படுத்தாது. சந்திரயான் 3 திட்டமிட்டபடி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும். சந்திரயான் 2 போல் இல்லாமல் வெற்றிகரமாக அமையும் என்று நம்புகிறோம். ஆனால் இது ஒரு சவாலான காரியம்” என்று தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறும்போது, “லூனா விண்கலத்தின் லேண்டர் மாடல் பற்றி எனக்கு தெரியும். 2008-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. ரஷ்யாவின் விண்வெளி ஆய்வகத்திற்கு சென்றபோது அவர்கள் இதனை என்னிடம் காட்டினார்கள். லேண்டரை விண்ணில் ஏவ அப்போது அவர்களிடம் வளங்கள் இல்லை. அதனால் நீண்ட நாட்களாக குளிர்பதன கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. நாம் ரஷ்யாவை நம்பி இல்லை. இப்போது ரஷ்யாவுடனான இந்திய விண்வெளியின் ஒத்துழைப்பு ககன்யான் மனிதவள விண்வெளி பயணத்திற்கான இந்திய விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

சைலேந்திரபாபு டிஎன்பிஎஸ்சி தலைவராக எதிர்ப்பு: ஆளுநர் எழுதிய குறிப்பு!

விஜயகாந்த் எப்படி இருக்கிறார்?: மகன் விஜயபிரபாகரன் பேட்டி!

 

 

 

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts