சந்திரயான் 3 விண்கலம் இன்று (ஜூலை 14) மதியம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் பாய உள்ளது.
விண்வெளி ஆராய்ச்சியில் புதுமையை நிகழ்த்த வேண்டும் என்ற மாபெரும் கனவோடு நிலவில் தடம் பதிப்பதற்காக சந்திரயான் 3 விண்கலம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு சந்திரயான் 1, 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2-ம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் சந்திரயான் 2 மெஷின் சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இஸ்ரோவுடனான துண்டிப்பை இழந்ததால் தோல்வியில் முடிந்தது.
அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட இஸ்ரோ தற்போது சந்திரயான் 3ஐ உருவாக்கியுள்ளது. புதிய சோதனையின் மூலம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதே சந்திரயான் 3-ன் பிரதான பணியாகும்.
துல்லிய வடிவமைப்பாலும், மாறுபட்ட வடிவத்திலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய கலன்களை உள்ளடக்கியதாக சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
1,752 கிலோ எடை கொண்ட லேண்டர், 2,148 கிலோ உந்துவிசை செயல்திறன் என மொத்தம் 3,900 கிலோ எடையில் ரூ.615 கோடி செலவில் சந்திரயான் 3 வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்திற்கு மிக அருகில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பத்திரமாக நிலவில் தரையிறங்குவது லேண்டரின் வேலை. விண்கலம் நிலவில் தரையிறங்கிய பிறகு ரோவர் வெளியில் வந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.
அவ்வாறு நடந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு நிலவில் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும்.
மாபெரும் கனவோடு உருவாக்கப்பட்டுள்ள சந்திரயான் 3 இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய உள்ளது. இதற்கான கவுன்ட்டவுன் நேற்று மதியம் 1 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
கொட்டித் தீர்த்த கனமழை – 5,000 கோழிகள் உயிரிழந்த சோகம்!
அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் அண்ணாமலை