நாளை விண்ணில் பாயவுள்ள சந்திரயான் 3 விண்கலத்தின் கவுன்ட்டவுன் இன்று (ஜூலை 13) பகல் 1 மணிக்குத் தொடங்க உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான் 2 விண்கலம் ஒரு சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இஸ்ரோவுடனான தொடர்பை இழந்ததால் மிஷன் தோல்வியில் முடிந்தது.
ஆனால் மீண்டும் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதுமையை நிகழ்த்த வேண்டும் என்ற கனவோடு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக இஸ்ரோ நிலவிற்கு தனது பயணத்தை தொடங்க உள்ளது.
புதிய சோதனையின் மூலம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவதே சந்திரயான் 3-ன் பிரதான பணியாகும்.
2019-ல் நடந்த இந்தத் தவற்றை சரிசெய்யும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டதே இந்த ‘சந்திரயான் 3’ மிஷன். தவறிலிருந்து கற்ற விஷயங்களை இதில் செயல்படுத்தியிருப்பதாகவும், தொழில்நுட்ப அளவில் பல விஷயங்கள் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகிய கலன்களை உள்ளடக்கியதாக சந்திரயான் 3 தயாரிக்கப்பட்டுள்ளது.
துல்லிய வடிவமைப்பாலும், மாறுபட்ட வடிவத்திலும் லேண்டர் மற்றும் ரோவர் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பத்திரமாக நிலவில் தரையிறங்குவது லேண்டரின் வேலை. விண்கலம் நிலவில் தரையிறங்கிய பிறகு ரோவர் வெளியில் வந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொள்ளும்.
1,752 கிலோ எடை கொண்ட லேண்டர், 2,148 கிலோ உந்துவிசை செயல்திறன் என மொத்தம் 3,900 கிலோ எடை கொண்டது சந்திரயான் 3.
ரூ.615 கோடி செலவில் வடிவமைக்கப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் நிலவின் தென் துருவத்திற்கு மிக அருகில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நடந்தால் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு நிலவில் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையையும் இந்தியா பெறும்.
இன்று பகல் 1 மணிக்கு சந்திரயான் 3 கவுன்ட்டவுன் தொடங்க உள்ளது. பின்னர் நாளை பிற்பகல் 2.35 மணியளவில் ஸ்ரீஹரிக்கோட்டாவின் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
தொடர்ந்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் 3 நிலவை தொடும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மோனிஷா
”கலைஞர் இல்லையெனில் அண்ணாமலை ஆடு மேய்த்திருப்பார்”: ஆ.ராசா
தீபாவளி பண்டிகை: 2 நிமிடங்களில் விற்றுத்தீர்ந்த டிக்கெட்!