வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 3!

Published On:

| By Monisha

சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று (ஜூலை 14) பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

1,752 கிலோ எடை கொண்ட லேண்டர், 2,148 கிலோ உந்துவிசை செயல்திறன் என மொத்தம் 3,900 கிலோ எடையில் ரூ.615 கோடி செலவில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கியிருந்தனர்.

கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்ணில் ஏவப்பட்டபோது ஏற்பட்ட சிறு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் சந்திரயான் 2 மிஷன் தோல்வியடைந்தது.

ஆனால் கடந்த முறை ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு தவறுகளை திருத்தியுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 3 நிலவின் தென் துருவத்திற்கு மிக அருகில் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நடந்தால் நிலவில் விண்கலத்தைப் பத்திரமாகத் தரையிறக்கும் நான்காவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். முன்னதாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இந்த பெருமையை பெற்றுள்ளன.

சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் ஏவப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், அதற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வந்தது இஸ்ரோ. தொடர்ச்சியாக நேற்று மதியம் 1 மணிக்கு 25 மணி 30 நிமிடங்களுக்கான கவுன்ட்டவுன் தொடங்கியது.

இதனையடுத்து சந்திரயான் 3 இன்று மதியம் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. சந்திரயான் விண்கலம் விண்ணில் பாய்வதை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேரலையில் கண்டு கைகளை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள்.

இன்று விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 3 ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவில் தரையிறங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

மோனிஷா

மாவீரன்: ட்விட்டர் விமர்சனம் இதோ!

கபில் சிபிலை ஓய்வெடுக்கச் சொன்ன நீதிபதி : ஏன்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share