சந்திரயான் – 3: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது எப்படி?

இந்தியா

நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

பூமியைச் சுற்றிவந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி புவியீர்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது.

நிலவுக்கு மிக நெருக்கமான, இறுதிக் கட்ட சுற்றுப்பாதையில் வலம் வரும் சந்திரயான்-3 விண்கலத்திலிருந்து லேண்டர் கலன் கடந்த 17 ஆம் தேதி விடுவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, சந்திரயான் 3 விண்கலம் இன்று (ஆகஸ்ட் 23) ஆம் தேதி மாலை 06.04 மணிக்கு நிலவில் தரையிறங்க உள்ளது. இதன் நேரலைக்காட்சிகள் இன்று மாலை 5.20 மணியில் இருந்து ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில், சந்திரயான்-3 பத்திரமாக நிலவில் கால் பதிக்க முக்கியமான எட்டு கட்டங்களை கடக்க வேண்டியுள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி,

முதல் கட்டம்:

தற்போது நிலவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் விக்ரம் லேண்டரை 7.4 கிலோமீட்டர் தொலைவுக்குக் கொண்டு வருவது.

இரண்டாவது கட்டம்:

லேண்டரின் வேகம் ஆயிரத்து 200 கிலோமீட்டர் அளவாகக் குறைக்கப்படும்.

மூன்றாவது கட்டம்:

லேண்டர் 7.4 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து 6.3 கிலோமீட்டராக கீழே இறக்கப்படும். அப்போது கிடைமட்டமாக இருக்கும் லேண்டர், தரையிறங்குவதற்கு வசதியாக, 50 டிகிரி கோணத்திற்கு சாய்வாகத் திருப்பப்படும். அதே நிலையில் 6.3 கிலோமீட்டர் தொலைவில் இருந்து 800 மீட்டர் தூரத்திற்கு குறைக்கப்படும்.

நான்காம் கட்டம்:

அடுத்த கட்டத்தில் லேண்டர் 150 மீட்டர் உயரத்திற்கு நிலவின் தரைப் பகுதியை நோக்கி கீழே கொண்டு வரப்படும். அப்போது லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நிலவின் மேற்பரப்பில் உள்ள மேடு பள்ளங்களைத் துல்லியமாக கவனித்து, சமதளப் பரப்பைத் தேர்வு செய்யும்.

ஐந்தாவது கட்டம்:

தேர்வு செய்த பாதுகாப்பான இடத்தில் மெதுவாக தரையிறக்குவது.

ஆறாவது கட்டம்:

அறுபது மீட்டர் உயரத்தில் இருந்து 10 மீட்டர் உயரத்திற்கு லேண்டரை கீழே இறக்குவது.

ஏழாவது கட்டம்:

ராக்கெட் எஞ்சின்கள் நிறுத்தப்படும். எஞ்சின்கள் நிறுத்தப்பட்டவுடன் விண்கலம் 10 மீட்டர் உயரத்தில் இருந்து நிலவின் தரைப்பரப்பில் வேகமாக மோதாமல் இருப்பதற்காக லேண்டர் மிக மெதுவாக தரையிறக்கப்படும்.

எட்டாவது கட்டம்:

கடைசி கட்டமாக நிலவில் தரையிறங்கிய லேண்டர் சுமார் 2 மணி நேரம் அதே நிலையில் நிற்கும்.
அதன்பிறகு லேண்டரில் இருந்து வெளியே வந்து பிரக்யான் ரோவர் இறங்கி ஆய்வை தொடங்கும்.

இச்சூழலில் இந்தியாவின் இந்த முயற்சியை உலகமே உற்று நோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சந்திரயான்-3… அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது: இஸ்ரோ!

எதிர்பாராமல் கிடைத்த க்ளூ: பொன்முடிக்குக் காத்திருக்கும் சட்ட சிக்கல்கள்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *