ஊழல் வழக்கில் கைதாகி இடைக்கால ஜாமீனில் விடுதலையான முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் இன்று (நவம்பர் 20) உத்தரவிட்டுள்ளது.
ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக திட்டத்தில் சுமார் 371 கோடி ரூபாய் வரை ஊழல் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் 9ம் தேதி கைது செய்யப்பட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இது ஆந்திர மாநில அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து 53 நாட்கள் ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்ய இருப்பதை சுட்டிக்காட்டி ஆந்திர உயர்நீதிமன்றம் கடந்த மாதம் 31ஆம் தேதி அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.
மேலும் சிகிச்சைக்கு பிறகு வரும் 28ஆம் தேதி தாமாகவே முன்வந்து அவர் ராஜமுந்திரி மத்திய சிறை கண்காணிப்பாளர் முன் சரணடைய வேண்டுமென்று நிபந்தனை விதித்திருந்தது.
அதன்படி சிறையிலிருந்து வெளியில் வந்த அவர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
இதற்கிடையே ஜாமீன் வழங்க கோரி இன்று சந்திரபாபு நாயுடு சார்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆந்திர உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்திரபாபு நாயுடுவிற்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு ஏற்பட்ட உடல்நிலை பாதிப்புகள் மற்றும் தொடர்ந்து அவரது இதய துடிப்பின் அளவு அதிகரித்து வருவது சுட்டிக்காட்டும் மருத்துவ ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்து ஜாமீன் கோரினார்.
இதனை ஏற்றுக்கொண்ட ஆந்திர உயர்நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.
மேலும் இம்மாதம் 28ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீனில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சந்திரபாபு நாயுடு தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால் வரும் 29ஆம் தேதி முதல் அவரால் அரசியல் நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
உண்மை சரிபார்ப்பு குழு அமைத்ததில் என்ன தவறு?: நீதிபதி சரமாரி கேள்வி!
திருச்செந்தூர் முருகன் கோவில் தரிசன கட்டண உயர்வா? – கோவில் நிர்வாகம் விளக்கம்!